நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என்பது நோக்கமல்ல : TNA
நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என்பது தமது நோக்கமல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது. பிரிவினைவாதத்தை தூண்ட வேண்டும் என்பதோ அல்லது நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என்பதோ தமது நோக்கம் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுத் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதே தமது கோரிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பி கட்சியை போட்டியாக கருதவில்லை எனவும் கடந்த தேர்தல்களில் அது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மழை வெள்ளம் காரணமாக மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் இதனால் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் காலத்தை அல்லது தேர்தல்கள் நடத்தும் காலத்தை மாற்றியமைக்க வேண்டுமென அரசாங்கத்திடம் கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட போவதாக வெளியாகும் தகவல்களில் எதுவித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் சுயாதீன கட்சி எனவும், தொடர்ந்தும் சுயாதீனமாக செயற்படுவதனையே தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் அரசாங்கத்துடன் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபடப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர் பிரச்சினைகளுக்காக தீர்வுத் திட்டத்தை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு தம்மிடம் வந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை பாராளுமன்றில் பிரதிநிதித்துவப்படுத்தியதாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளின் சிறுவர்களை படையில் இணைத்துக் கொள்ளல் போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக தமது கட்சி குரல் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். சில ஊடகங்களும், அரசியல்வாதிகளும் தம்மை புலி ஆதரவுக் கட்சியாக முத்திரை குத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply