தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புளொட் இணைந்து போட்டி
உள்ளுராட்சி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டம் உட்பட கூட்டமைப்பு போட்டியிடும் சகல சபைகளிலும் இணைந்து ஓரணியில் போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, எம்.பிக்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், எம்.சுமந்திரன் ஆகியோருக்கும் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தனுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுக்களின்போது இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் தொடராக நேற்று வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கும் புளொட் முக்கியஸ்தர்களுக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் புளொட் சார்பில் அதன் வன்னிப் பிராந்திய அமைப்பாளரான சிவநேசன் பவான் மற்றும் வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜீ.ரி.லிங்கநாதன் ஆகியோர் பங்கு பற்றியிருந்தனர்.
இதுபற்றி விளக்கமளித்துள்ள புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்றிணைந்து போட்டியிடும் எமது தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி என்னுடன் தொடர்புகொண்டு வரவேற்பு தெரிவித்தார். இணைந்து போட்டியிட கட்சித்தலைமை எடுத்த முடிவுக்கமைய மாவட்டந்தோறும் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்தி வேட்பாளர் நியமனம் தொடர்பான விடயங்களில் இணக்கப்பாடுகள் காணப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாகவே நேற்று வவுனியாவில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இதுபோல் யாழ்ப்பாணத்திலும் வேட்பாளர் நியமனம் தொடர்பாக கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் இணக்கப்பாடுகள் காணப்பட்டு வருகின்றன. மக்களின் நன்மை கருதியே இம்முடிவினை எடுத்துள்ளோம். கூட்டமைப்பு போட்டியிடும் சகல சபைகளிலும் நாம் இணைந்து செயற்படுவோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடான சந்திப்பின்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்களும் கலந்து கொண்டிருந்தார். தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதற்கு அவரும் இணக்கம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இணைந்து போட்டியிடத் தீர்மானித்தோம் என்று புளொட் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply