சன் சீ ஆட்கடத்தல் கப்பல் விவகாரம்: பிரதான சந்தேக நபர் கைது

எம்.வி. – சன் சீ கப்பல் 492 இலங்கையர்களை பிரித்தானிய கொலம்பியத் தீவுகளுக்குச் சட்டவிரோதமாக அழைத்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரைக் கைது செய்திருப்பதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 48 வயதுடைய நடேசன் ஜீயநந்தன் என்பவரையும், சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு ஆட்களைக் கடத்தும் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் 7 பேரையும் தாய்லாந்து அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்திருப்பதாக குளோப் அன்ட் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் புலித் தலைவர்கள் உட்பட மேலும் பல இலங்கை யர்கள் கப்பல்கள் மூலம் கனடாவுக்குள் நுழைய விருப்பதாக கனேடியப் புலனாய்வு அதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையில், தாய்லாந்து அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின் போதே முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சன் சீ கப்பல் விவகாரத்தில் ஜீயநந்தன் தொடர்புபட்டிருந்தாலும், இதனைத் திட்டமிட்ட முக்கியமான நபர் இவரல்ல என்று குளோப் அன்ட் மெயிலுக்குக் கருத்துத் தெரிவித்த கனேடிய அதிகாரிகள் கூறியுள்ளனர். கனடாவுக்குள் சட்ட விரோத குடியேற்ற வாசிகளை அழைத்து வந்த நடவடிக்கை தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து வருவதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சட்ட விரோதமாகச் செல்லுபவர்கள் தாய்லாந்தை இடைத்தங்கல் இடமாகப் பயன்படுத்தி வருவதால், தாய்லாந்திலிருந்தே கூடுதலான சட்ட விரோத வாசிகள் ஏனைய நாடுகளுக்குச் செல்வதாக விசாரணைகள் கூறுகின்றன.

அதேநேரம் முன்னாள் புலிப் போராளித் தலைவர்கள் 50 பேர் உட்பட 400 தமிழர்கள் சட்ட விரோதமாக கனடா நுழைவதற்கு முயற்சிப்பதாக கனேடிய புலனாய்வு அதிகாரிகள் எச்சரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply