வடக்கில் அச்சுறுத்தல்களும் அவலங்களும் இன்னும் ஓயவில்லை: விஜித்த ஹேரத்
அரசாங்கத்தின் “மாபியா’ ஒழிப்பு நடவடிக்கைகள் எப்போது வடக்கில் சாத்தியப்படும் என்று தெரியவில்லை. வடக்கில் அச்சுறுத்தல்களோ பொது மக்களின் அவலங்களோ இன்னும் குறைவடையவில்லை” என ஜனநாயக தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகளுக்கு சுதந்திரமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் செயற்படவோ வேட்பாளர் தெரிவுகளில் ஈடுபடவோ முடியாத சூழலே தற்போது யாழ். குடாநாட்டில் ஏற்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் பொதுமக்கள் எவ்வாறு சுதந்திரமாக நடமாட முடியும் எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
இது தொடர்பாக விஜித ஹேரத் எம்.பி. தொடர்ந்து கூறுகையில், அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் சென்று அங்கு வாழ் தமிழ் மக்களிடம் வாக்குறுதி ஒன்றை வழங்கினார். அதாவது இனி கடத்தல், கொலை, கொள்ளை போன்ற செயற்பாடுகளை முற்றாக இல்லாதொழிப்பதாக உறுதியளித்தார். ஆனால் இதுவரையில் மேற்படி சம்பவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
ஏனெனில் இன்னும் சம்பவங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே உள்ளது. நேற்று முன்தினமும் ஆசிரியர் என்று சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரின் சடலம் வடக்கில் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் வடக்கில் எப்போது அமைதியை ஏற்படுத்தப் போகின்றது.
கடந்த மூன்று தசாப்தகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் வேதனைகளையும் சோதனைகளையும் கொடுப்பது நியாயமற்ற செயலாகும். உறுதியான ஜனநாயக சூழலை வடக்கு கிழக்கு மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும்.
யுத்தம் முடிவடைந்தும் சுதந்திரமான தேர்தல் ஒன்றை சந்திக்க முடியாத சூழ்நிலையிலேயே வடக்கு வாழ் மக்கள் உள்ளனர். இன்று எதிர்க்கட்சிகளுக்கு தமது வேட்பாளர்களை தெரிவு செய்ய முடியவில்லை. பல நபர்களிடமிருந்து அச்சுறுத்தல்கள் வருகின்றன என்றும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply