இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் குடாநாட்டில் தேர்தல் கால நிலைமைகள் சந்தேகத்துக்குரியவை: த.தே.கூ

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடவடிக்கைகள் யாவும் நிறைவடைந்துள்ள போதிலும் குடாநாட்டில் குடி கொண்டுள்ள அச்சம் முற்றாக நீங்கிவிடவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கின் அனைத்துப் பிரதேசங்களும் இராணுவம் மற்றும் புலனாய்வுத்துறை ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காரணத்தினால் எதிர்வரும் தேர்தல் கால நிலைமைகள் எந்தளவில் சுயாதீனத்தன்மை வாய்ந்ததாக அமையப் போகின்றது என்பது தொடர்பிலும் சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன என்றும் கூட்டமைப்பு குறிப்பிடுகின்றது.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடவடிக்கைகள் யாவும் நேற்று வியாழக்கிழமை நண்பகலுடன் நிறைவுக்கு வந்தது. இந்நிலையில் வடக்கு கிழக்கை பிரதானமாக கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான தமிழ்க் கட்சிகளின் கூட்டணி தேர்தல்களை எதிர்கொள்வதில் நிலவுகின்ற சிக்கல்கள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பி. யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

அண்மைக் காலமாக யாழ். குடாநாட்டில் இடம்பெற்று வந்த மனிதப் படுகொலைகள்,ஆட்கடத்தல்கள், அச்சுறுத்தல்கள், தாக்குதல் சம்பவங்கள் போன்றவற்றினால் ஏற்பட்ட அச்ச நிலைமை இன்னும் மாறிவிடவில்லை. அதேபோல் இடையூறுகள் முற்றாக ஒழிந்து விட்டதாகவும் கூற முடியாதுள்ளது.

இந்த நிலைமைகளால் வடக்கில் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு முன்வர இளைஞர்கள், யுவதிகள் பெரும் அச்சம் கொண்டிருந்தனர். இருப்பினும் தற்போது வேட்பு மனுத்தாக்கல் நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துள்ளன. வடக்கு, கிழக்கினை பிரதானமாகக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான கூட்டணி களமிறங்குகின்றது.

தற்போதுள்ள நிலைமையிலும் பார்க்க தேர்தல் பிரசாரக் காலப் பகுதியானது சற்று மாறுபடுவதற்கான வாய்ப்புள்ளது. ஏனெனில் வடக்கின் அனைத்துப் பிரதேசங்களும் இராணுவத்தினரதும் புலனாய்வுப் பிரிவினரதும் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

அப்படி இருக்கையில் அரசாங்கத்துக்கு எதிராக களமிறங்குகின்ற தமிழ்க் கட்சிகளின் கூட்டணி தனது தேர்தல் பிரசாரங்களை சுதந்திரமாக முன்னெடுப்பதற்கான சூழல் உருவாக்கித் தரப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போது தேர்தல் கள நிலைமை ஓரளவுக்கு சுமுகமாக காணப்பட்டாலும் பிரசாரங்கள் சூடுபிடிக்கும் சந்தர்ப்பங்களில் எவ்வாறு அமையும் என்பது கேள்வியாக இருக்கின்றது.

மேலும் இரõணுவ மற்றும் புலனாய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் குடாநாடு இருக்கின்றமையால் அரசுக்கு எதிரானவர்கள் மீது அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.

எனவே நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சித் தேர்தல்களின் போது வடக்கிற்கு முக்கியத்துவம் அளித்து அங்கு நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெறுவதற்கு அரசாங்கமும் தேர்தல்கள் ஆணையாளரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகும். குடாநாட்டில் அசாதாரண நிலைமைகளை முற்றாக நீக்கி எமது மக்களின் வாக்குரிமைகளை பாதுகாக்க அரசு உரிய வழி வகைகளை செய்ய வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply