ஈ.பி.டி.பி. வடமராட்சி கிழக்குப் பொறுப்பாளர் விபத்திலேயே சாவு; மருத்துவ பரிசோதனையில் தகவல்; பலாலித் தலைமையகம் உறுதி

ஈபிடிபி கட்சியின் வடமராட்சி கிழக்குப் பொறுப்பாளர் ரட்ணசிங்கம் சதீஸ் இன்று காலை உயிரிழந்தார். அவர் விபத்துக் காரணமாகவே உயிரிழந்தார் என்று யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று முதலில் செய்திகள் வெளியான போதும், அவர் விபத்திலேயே உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தச் சம்பவம் ஒரு வீதி விபத்தே தவிர சூட்டுச் சம்பவம் அல்ல என்று இராணுவத்தின் பலாலித் தலைமையக ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் மேஜர் மல்லவராச்சி தெரிவித்தார்.

பருத்தித்துறை ஆனைவிழுந்தான் சந்திக்கும் வல்லிபுரத்துக்கும் இடையில் வீதியில் ஆள்நடமாட்டம் அற்ற பகுதியில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்காக ஈபிடிபியினரால் தெரிவு செய்யப்பட்டிருந்த வேட்பாளர் பட்டியலில் பருத்தித்துறை நகர சபைக்கு இவரது பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.

அம்பனில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொள்ள இருந்த நிகழ்வுகளுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளைக் கவனிக்கச்சென்ற சமயமே அவர் உயிரிழந்தார் என ஈபிடிபியினர் தெரிவித்தனர்.

அவர் பயணித்த மோட்டார் சைக்கிளில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அவரது நெற்றியிலும் பின்தலையில் பெரிய காயமும் இருந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு, குருதிப் போக்கு அதிகமாகி அவர் உயிரிழந்தார் என்று இன்று மாலையில் இடம்பெற்ற சட்டமருத்துவப் பரிசோதனையில் தெரியவந்ததாக யாழ். போதனா வைத்தியாசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மோட்டார் சைக்கிளில் இருந்தபடியே கீழே விழுந்ததால் அவரது கால்களில் ‘சைலன்ஸர்’ சுட்ட காயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் பருத்தித்துறை பதில் நீதிவான் பொ.குமாரசாமி விசாரணைகளை மேற்கொண்டார். ஆரம்ப விசாரணைகளை அடுத்து சடலத்தை மருத்துவப் பரீசிலனைக்கு உட்படுத்திய பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

சட்டமருத்துப் பரிசோதனைக்கான வசதிகள் மந்திகை வைத்தியசாலையில் இல்லாவிட்டால் அதனை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கும்படியும் அவர் தெரிவித்தார்.

இதனை அடுத்து காவல்துறையினர் சடலத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி பகல் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply