லங்கா ஈநியூஸ் அலவலகம் தீக்கிரை
கொழும்பு ராஜகிரிய மாலம்பேயில் அமைந்துள்ள லங்கா ஈநியூஸ் அலவலகம் இலங்கை நேரம் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. லங்கா நியூஸ் இணையத்தளத்தில் இது குறித்த ஒரு சிறுகுறிப்பு அவசரஅவசரமாக இடப்பட்டிருக்கிறது. ‘அதிகாலை இரண்டு மணியளவில் இனந்தெரியாத நபர்கள் அலுவலகத்தை உடைத்து உள்ளே சென்று தீ மூட்டியுள்ளனர். அலுவலக்தின் உள்ளே இருந்த அனைத்துப் பொருட்களும் எரித்து அழிக்கப்பட்டு விட்டன’ என அது தனது குறிப்பில் தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கான வலையமைப்பின் தகவல் வட்டாரங்கள் இச்செய்தியை ஊர்ஜிதம் செய்துள்ளன.
லங்கா ஈ நியூஸ் அலுவலகத்திற்கு செல்வது பாதுகாப்பற்றது என்பதால் அலுவலகத்தை நோக்கி எவரும் செல்லவில்லை.
சிங்கள மொழிமூலமாக வெளிவரும் இணையத்தளங்களுள் முன்னணியில் உள்ள லங்கா ஈநியூஸ் இணையத்தளம் கடந்த 2010 ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரித்ததன் காரணமாக பல்வேறு நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர் கொண்டு வந்தது.
அதனுடைய ஆசிரியர் சந்துரவன் சேனாதீரவுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது. ஆனால், லங்கா ஈநியூஸ் இணையத்தளம் கொழும்பிலிருந்த அர்ப்பணிப்புள்ள ஒரு குழுவினரால் தொடர்ந்து நடாத்தப்பட்டு வந்தது.
அண்மைக்காலங்களில் அதில் பணியாற்றி வந்த பல ஊடகவியலாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்காளாகி வந்தனர். இந்த இணையத்தளத்தில் எழுதி வந்த பிரகீத் எக்னெலியகொட கடந்த 2010 ஜனவரி 24ஆம் திகதி காணாமல் போனார்.
கொழும்பின் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த சியத்த வானொலி மற்றும் தொலைக்காட்சியின் அலுவலகம் 30 ஜுலை 2010 அதிகாலை ஒன்றரை மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டது. இதன்காரணமாக மில்லியன் கணக்கான ரூபாய்கள் அதற்கு இழப்பு ஏற்பட்டது. உரிமையாளர்கள் கூறுவதன்படி 12க்கு மேற்பட்டவர்களைக் கொண்ட ஒரு குழு அதற்கு தீயிட்டது. இது தொடர்பாக இதவரை எவரும் கைது செய்யப்படவுமில்லை. இச்சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை எதுவும் பகிரங்கமாக்கப்படவுமில்லை.
இலங்கையில் ஊடக சுதந்திரத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த அநாகரீகமான செயலை ஊடகங்களுக்கான வலையமைப்பு கண்டிக்கிறது. அத்தோடு இதற்குக காரணமானவர்களை சட்டத்தின்முன் கொண்டு வந்து நிறுத்தும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு உரியது என்றும் அது சுட்டிக்காட்டுகிறது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply