கொழும்பின் பல பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பல பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பின், முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை மற்றும் இராஜகிரிய ஆகிய பகுதிகளிலும் கொழும்பை அண்டிய பிரதேசங்களான தெஹிவளை, கொகுவளை, நுகேகொடை போன்ற பகுதிகளிலுமே இந்த திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் இயக்கம் தீர்மானித்துள்ளதாக பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்தே தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரு திணங்களாக நடத்தப்பட்ட இந்த சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கான வீடுகள், தொழில் நிலையங்கள் மற்றும் வாகனங்கள் போன்றனவும் பலத்த சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
இதன் போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் சிலரே மேலதிக விசாரணைகளுக்காக அந்தந்த பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நூற்றுக்கணக்கான பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இணைந்தே இந்த தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் சிலர் குறித்த பகுதிகளில் அமைந்துள்ள பிரதான பஸ் நிலையங்களில் நிறுத்தப்படும் பஸ்களில் ஏறி அவற்றில் பயணிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply