எகிப்தில் 60 நாளில் புதிய அரசு?
எகிப்தில் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்பதையடுத்து, 60 நாள்களில் புதிய அரசு பதவியேற்கும் எனத் தெரிகிறது.மக்களின் தொடர் போராட்டம் காரணமாக முபாரக் வெள்ளிக்கிழமை பதவி விலகினார். அவர் செங்கடல் பகுதியில் உள்ள ஓய்வில்லத்துக்குச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, அரசுக்கு எதிரான போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த 18 நாள்களாக பதற்றமாக இருந்த கெய்ரோ நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது.
பல்லாயிரக் கணக்கானோர் முற்றுகையிட்டிருந்த போராட்டத்தின் மையமான தாஹ்ரீர் சதுக்கத்திலிருந்து மக்கள் கலைந்து செல்லத் தொடங்கிவிட்டனர். அரசு ஊழியர்களும், பொதுமக்களும் சேர்ந்து போராட்டம் நடந்த பகுதிகளை சனிக்கிழமை சுத்தம் செய்தனர்.
போராட்டம் நடந்தபோது வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை ராணுவம் அகற்றிவிட்டது. கெய்ரோ மட்டுமல்லாமல் எகிப்தின் பெரும்பாலான பகுதிகளிலும் 30 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்ததை மக்கள் ஆடிப்பாடி கொண்டாடினர்.
தாஹ்ரீர் சதுக்கத்தில் இருந்து மக்கள் கலைந்து செல்லத் தொடங்கிவிட்ட போதும், ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்கின்றனர். பெற்ற வெற்றியைப் பாதுகாப்பதற்காக தாஹ்ரீர் சதுக்கத்தில் தங்கியிருப்பதாகக் கூறும் அவர்கள், முபாரக்கை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இதனிடையே, சுவிட்சர்லாந்தில் உள்ள முபாரக்கின் சொத்துக்களை அந்நாடு முடக்கியிருப்பதாக அல் அராம் பத்திரிகையில் செய்தி வெளியாகியிருக்கிறது.
தற்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நாடு இருப்பதாகவும், விரைவில் நாடாளுமன்றமும் அமைச்சரவையும் கலைக்கப்படும் என்றும் அல் அரேபியா தொலைக்காட்சி தெரிவித்தது.
விரைவில் அடுத்த நடவடிக்கை: ராணுவம்
முபாரக் கெய்ரோவில் இருந்து வெளியேறிவிட்டதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக விரைவில் அறிவிப்போம் என்று ராணுவம் சனிக்கிழமை தெரிவித்தது. இது தொடர்பாக முப்படைக் குழு வெளியிட்ட அறிக்கையில், “மக்களின் மனநிலைக்கு மதிப்பளிக்கிறோம்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள், ஏற்பாடுகள் குறித்து விரைவில் அறிவிப்போம். எனினும் அவை அரசியல் சட்டத்துக்கு மாற்றானதாக இருக்காது’ என்று கூறப்பட்டுள்ளது.
நாட்டில் தேர்தல் நடந்து மக்களாட்சி மலர்வதை கண்காணிப்போம் என்றும் எகிப்து செய்துகொண்டிருக்கும் அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களையும் மதிப்போம் என்றும் ராணுவம் தெரிவித்திருக்கிறது. அடுத்த 60 நாள்களில் புதிய அரசு பதவியேற்கும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, போராட்டத்தின்போது முபாரக்குக்கு மாற்றாகக் கருதப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கூறியிருக்கிறது. “இந்தப் போராட்டம் எகிப்தின் ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்றதாகும்.
இதில் எந்தவொரு குழுவும் தனியாகப் பெருமையடித்துக் கொள்ள முடியாது. இது எங்களுக்கும் பொருந்தும்’ என்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply