நபியவர்களின் போதனைகள் தேசிய ஐக்கியத்திற்கு பாலமாக அமையும் : ஜனாதிபதி

உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுடன் இணைந்து எமது நாட்டு முஸ்லிம் மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினமான மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் நான் மகிழ்ச்சியடை கிறேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீலாத்தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதில் ஜனாதிபதி மேலும் கூறியதாவது,

நாட்டில் சமாதானமும் சுபீட்சமும் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாம் சமாதானம், நல்லிணக்கம் தொடர்பான நபியவர்களின் போதனைகளை அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும். அவை எமது சமூகத்தின் ஐக்கியத்திற்கும் சகவாழ்விற்கும் மிகப் பெரும் பலமாகவும் ஆசிர்வாதமாகவும் அமையும்.

பரஸ்பரப் புரிந்துணர்வு, சகோதரத்துவம், ஒத்துழைப்பு, நீதி மற்றும் நேர்மை என்பனவே முஹம்மத் நபி  அவர்களின் போதனைகளின் அடிப்படை அம்சங்களாகும். இந்தப் போதனை களுக்கேற்ப தமது வாழ்க்கை ஒழுங்கை மீளமைத்துக்கொள்வதற்கு மீலாதுன்நபி விழா முஸ்லிம்களுக்கு சிறந்த சந்தர்ப்பமாகும்.

நபியவர்களது போதனைகள் தனிமனித வாழ்க்கைக்கு மட்டுமல்லாது சமூக வாழ்க்கைக்கும் வழிகாட்டு பவையாகும். அதன் மூலம் தேசிய ஐக்கியத்திற்குக் கிடைக்கும் பலம் நாட்டை ஆசியாவின் ஆச்சரியமாக ஆக்குகின்ற எமது பயணத்திற்குப் பெரிதும் உதவியாய் அமையும் என்பது எனது நம்பிக்கையாகும்.

இன்று எமது நாட்டில் வாழும் எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதத்தின் கொடூரப் பிடியிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர். என்றாலும் உலகில் இன்னும் ஒரு பிரிவினர் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளனர். எமது நாட்டில் போன்று அவர்களுக்கும் விடுதலை கிடைக்க வேண்டுமென்பதே இந்த சிறப்பான நாளில் எல்லா முஸ்லிம்களினதும் பிரார்த்தனையாகும்.

அந்த பிரார்த்தனையுடன் நாங்களும் மிகுந்த ஆர்வத்துடன் இணைந்து கொள்கிறோம்.

உங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சிகரமான மீலாதுன் நபி வாழ்த்துக்கள்!

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply