தடுப்புக்காவலிலுள்ள 676 புலி உறுப்பினர்களின் விடுதலைக்கு சட்டமா அதிபர் பரிந்துரை

ஓமந்தை மற்றும் பூசா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் 676 பேர் விடுதலை செய்யப்படலாம் என்று சட்ட மா அதிபர் பரிந்துரைத்துள்ளதாக படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடக அதிகாரி லக்ஷ்மன் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதியினால் ஏற்படுத்தப்பட்ட பல்துறை நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக்குழுவினால், தடுத்துவைக்கப்பட்டுள்ள 676 விடுதலைப் புலிகளை விடுதலை செய்வதற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக லக்ஷ்மன் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை விரைவு படுத்த வேண்டும் என்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது குறித்து  பேசிய அவர், நல்லிணக்க ஆணைக்குழு வடக்கு, கிழக்கில் தனது விசாரணைகளை நடத்திய போது, அங்கு சாட்சியமளித்த தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் பெற்றோர்கள், தமது பிள்ளைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு கேட்டிருந்தனர் என்றும் அதற்கமைய, தாம் சட்ட நடவடிக்கைகள் விரைவுபடு“த்தப்பட வேண்டுமென்று ஜனாதிபதிக்கு இடைக்கால பரிந்துரை ஒன்றை செய்துள்ளதாகவும் கூறினார். அந்த இடைக்கால பரிந்துரையின் அடிப்படையில் ஒரு பல்துறை நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக்குழு ஒன்றை ஜனாதிபதி அமைத்தார். அதற்கு தலைவராக சட்டமா அதிபர் நியமிக்கப்பட்டார்.

அத்துடன் இந்த விடுதலைப் புலிகளின் ஒவ்வொருவரது விடயத்தையும் தனித்தனியாக ஆராய சட்ட மா அதிபர் திணைக்களத்துக்குள் சிறப்புக்குழு ஒன்றை சட்ட மா அதிபர் அமைத்தார்.

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 676 பேரை நேரடியாகவோ அல்லது புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு பின்போ விடுதலை செய்ய சிபாரிசு செய்வது என்று அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்ட மா அதிபர் தற்போது முடிவெடுத்துள்ளார். இவர்களில் பூசா முகாமில் இருந்து 251 பேரும், ஓமந்தையில் இருந்து 425 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, மே மாதம் 15ஆம் திகதிக்கு முன்னதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி பரிந்துரைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply