கூட்டமைப்புக்கு அளிக்கும் வாக்குகள் அரசாங்கத்தை அதிரவைக்க வேண்டும் : வீ.ஆனந்தசங்கரி
வடக்குகிழக்கில் இடம்பெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து களமிறங்கியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மக்கள் அளிக்கும் வாக்குகள் அரசாங்கத்தை அதிரவைக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கூறியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத பல கட்சிகளையும் உள்வாங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் உள்ளுராட்சித் தேர்தலில் களமிறங்கிய நிலையில் மட்டக்களப்பிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் சனிக்கிழமை வந்த வீ.ஆனந்தசங்கரி நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்தார்: “கடந்த கால சம்பவங்கள் எல்லாவற்றையும் மறந்து அனைவரும் ஒன்று சேர வேண்டும். 1972ஆம் ஆண்டு தந்தை செல்வாவின் பின் அணி திரண்டது போன்று அணி திரண்டு அரசிற்கும் சர்வதேசத்திற்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே எமது தற்போதைய நிலைப்பாடு.
துரதிஷ்டவசமாக ஒரு சில கட்சிகள் இதுவரை உள்வாங்கப்படவில்லை. நான் அனைவரையும் உள்வாங்க வேண்டும் என்றே வலியுறுத்தி வருகின்றேன். பிழை செய்து விட்டு செய்யாது இருப்பவர்கள் இருக்கின்றார்கள். தொடர்ந்தும் பிழையினைச் செய்து கொண்டு இருப்பவர்களும் இருக்கின்றார்கள். தொடர்ந்தும் பிழை செய்து கொண்டிருப்பவர்களை உள்வாங்க முடியாது.
மொழியை அழித்த அரசாங்கம் இன்று சமயத்தை கலாசாரத்தை அழிக்கின்றது. வடக்கிலுள்ள ஆலயங்களில் முட்கம்பி வேலி போட்டு இராணுவத்தினாரல் தடுத்து வைத்து கொண்டு இந்து ஆலயங்களுக்கு அருகில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
காவல் தெய்வமாக விளங்கும் இரணைமடு கனகாம்பிகையம்மன் ஆலயத்தை முட்கம்பி போட்டு மறித்து விட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. வீடுகள் வர்த்தக நிலையங்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. மாலை 6.00 மணிக்கு பின்னர் நடமாட முடியாது.
ஒவ்வொரு கிராமத்திலும் இராணுவமுகாம். ஒவ்வொரு கிராமமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிங்களத்தில் தேசிய கீதம் பாடவேண்டும். அரசமரம் நடவேண்டும் என்றும் சந்திக்கு சந்தி புத்தர் சிலை வைக்கவேண்டும் எனவும் உங்களைத் திருத்த முடியாது நாங்கள் வந்து தான் திருத்த வேண்டும் எனவும் கூறி சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டு நிலங்களை பிடிக்கின்றார்கள்.
எமது மொழி, சமயம், கலாசாரத்தை சீர்குலைக்கின்றார்கள். விடுதலைப் புலிகளிடம் இருந்து புனர்வாழ்வளிக்கும் யுவதிகளுக்கு பரத நாட்டியம் பழக்கியிருக்கலாம், ஆனால் கண்டிய நடனம் பழக்கி அரங்கேற்றியிருக்கிறார்கள். பரதநாட்டியம் பழக்கிவிட்டு கண்டியநடனம் பழக்கியிருந்தால் ஏற்கலாம். கலாசாரத்தையும் அழித்து வருகின்றார்கள்.
பத்தாயிரம் விடுதலைப்புலிகளுக்கு புனர்வாழ்வளிப்பதாக கூறுகின்றார்கள். அனைவரும் விடுதலைப்புலிகளாக இருந்தவர்கள் இல்லை. அப்பாவி இளைஞர்களைப் பிடித்து புலி முத்திரை குத்தி வைத்தியர்களாக வேண்டும் என்று கனவுகண்ட பிள்ளைகளை மரவேலைக்கும் தையல் வேலைக்கும் பழக்குகின்றார்கள்.
சமயத்தை சமயக்குரவர்கள் ஊடாகப் பரப்பவேண்டும். அதனை எமது மக்கள் ஏற்கவேண்டும். ஆனால் எமது மக்களிடம் இராணுவத்தினாரூடாக பௌத்தம் திணிக்கப்படுகின்றது. இதனை ஏற்கமுடியாது.
எமது சமயத்தை சீரழிக்க வேண்டாம் என்று ஜனாதிபதிக்கு கூறியுள்ளேன். எமது மொழியை அழிக்க திட்டமிட்டது போன்று நாளுக்கு நாள் சமயத்திலும் கலாசாரத்திலும் சொறிகின்றார்கள். எமது மக்களை துன்புறுத்துகின்றார்கள்.
இந்நிலையில் நாங்கள் ஒருவருக்கொருவர் குற்றம் கூறிக்கொண்டிருப்பதைத் தவிர்த்து ஒன்று சேர்ந்து அரசுக்கும் சர்வதேசத்திற்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்று சேரவேண்டும்.
தற்போது இடம்பெறவிருக்கும் உள்ளுராட்சித் தேர்தலானது எமக்கு பரீட்சாத்தமான தேர்தலாகவே உள்ளது. தமிழ் மக்கள் எமது கூட்டமைப்பிற்கு அளிக்கும் வாக்கானது அரசாங்கத்தை அதிரவைக்க வேண்டும். அதற்கு அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டும் எனவும் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply