கடாபி, அவரது குடும்பத்தினர் சொத்துக்களை முடக்கியது அமெரிக்கா
லிபியா தலைவர் மும்மர் கடாபி, அவரது குடும்பத்தினர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் அமெரிக்கா முடக்கியுள்ளது. லிபியா தலைவர் கடாபிக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை ஒடுக்க போர் விமானங்கள் மூலம் குண்டுவீசுவது உட்பட பல வழிகளை கடாபி கடைபிடித்து வருகிறார். இதற்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், கடாபி, அவரது குடும்பத்தினர், அவரது நண்பர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பலரின் சொத்துக்களை முடக்கும் உத்தரவில் நேற்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்டார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:சர்வதேச விதிகள் மற்றும் பொதுமதிப்பை மீறி மக்கள் மீது தாக்குதல் நடத்தியற்கு கடாபி அரசு பொறுப்பு ஏற்றே தீர வேண்டும். இந்த சொத்து முடக்கம், கடாபியின் அரசைக் குறிவைத்து அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த சொத்துக்கள் அனைத்தும் லிபியா மக்களுக்குச் சொந்தம். அவை காக்கப்படாவிட்டால், கடாபி உள்ளிட்டவர்களால் தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்படும். அது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு ஆபத்தாக முடியும். அமெரிக்கா தொடர்ந்து லிபியா மக்களுக்கு ஆதரவாக செயல்படும். அவர்களின் விருப்பங்களுக்கேற்ப அந்நாட்டு அரசு நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.அமெரிக்காவைத் தொடர்ந்து, 27 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட ஐரோப்பிய யூனியனும், லிபியா மீது அடுத்த வாரம் பொருளாதார தடையை கொண்டு வர முடிவு செய்துள்ளது.
லிபியா தூதர்கள் கண்ணீர்:நேற்று முன்தினம் இந்தியா உள்ளிட்ட 14 உறுப்பினர்களுடன் கூடிய ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில், லிபியா மீது பொருளாதார தடை, ராணுவ நடவடிக்கை, கடாபி உள்ளிட்டோர் வெளிநாடு செல்ல தடை, சொத்து முடக்கம், லிபியா மீது விமானம் பறக்க தடை, சர்வதேச கோர்ட்டில் கடாபியை கொண்டு வந்து நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தடைகளை கொண்டு வரும் ஒரு தீர்மானத்தை, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகள் இணைந்து முன்மொழிந்தன.இக்கூட்டத்தில், லிபியாவின் ஐ.நா., தூதர் முகமது ஷால்கம் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர்,”உங்களை நான் தான் ஆள வேண்டும்; இல்லையெனில் உங்களை நான் கொல்வேன் என்று கடாபி கூறுகிறார். இப்போது லிபியா ஒன்றுபட்டுள்ளது.
லிபியா மக்களை விட்டு விடுங்கள் என்று என் சகோதரர் கடாபியிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து அப்பாவிகளை கொல்லாதீர்கள். இறுதியான, விரைவான, அதே நேரம் துணிவான முடிவு எடுக்கும்படி பாதுகாப்பு கவுன்சிலை கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறிவிட்டு, ஐ.நா.,வுக்கான லிபியா துணைத் தூதர் இப்ராகிம் டப்பாசியை கட்டிப் பிடித்து கதறி அழுதார். இப்ராகிமும் அழுதார்.
உள்ளம் உருக்கும் இந்தக் காட்சியால், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சிறிது நேரம் ஸ்தம்பித்தது. பின், மற்ற தூதர்கள் எழுந்து வந்து ஷால்கமுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
தொடர்ந்து நேற்று லிபியா மீது பொருளாதார தடை குறித்து விவாதிப்பதற்காக மீண்டும் கவுன்சில் கூடியது. இந்த இரண்டாவது கூட்டத்தில், லிபியாவில் நிலவும் வன்முறையை கட்டுப்படுத்துவது, பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு, நடந்த சம்பவங்களுக்கான பொறுப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் லிபியா மக்களின் கோரிக்கைகளை அங்கீகரித்தல் உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட்டன.
கடாபி பிடிவாதம்: தலைநகர் டிரிபோலி மற்றும் பெங்காசியில் நேற்று முன்தினம் லிபியா மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு கடாபிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். டிரிபோலியில் நடந்த போராட்டத்தில் மக்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. நாட்டின் கிழக்குப் பகுதி ராணுவப் பிரிவு முழுவதும் பொதுமக்களுடன் சேர்ந்து கொண்ட நிலையில், அல் ஜாவியா, மிஸ்ரட்டா பகுதியில் எதிர்ப்பாளர்களுடன் மோதலில் ஈடுபட முடியாமல், பேச்சுவார்த்தைக்கு சம்மதித்துள்ளது. டிரிபோலியில் உள்ள “க்ரீன்’ சதுக்கத்தில் திரண்டிருந்த தனது ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று முன்தினம் “வீடியோ’ மூலம் பேசிய கடாபி, “நம்மை எதிர்ப்பவர்களை தோற்கடிப்போம். நான் மக்கள் மத்தியில் உள்ளேன். நாம் தொடர்ந்து சண்டை போடுவோம். நான் ஆயுதக் கிடங்குகளை திறந்து விடப் போகிறேன். ஒவ்வொரு லிபியனிடமும், பழங்குடியிடமும் இனி ஆயுதங்கள் இருக்கும்’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து, நேற்று டிரிபோலியில் கடாபி ஆதரவாளர்கள், கைகளில் ஆயுதங்களுடன் வீதிகளில் வலம் வந்தனர். எனினும், நகரின் பிற பகுதிகளில் மோதல் வலுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டின் பிற பகுதிகளிலும் சண்டை நீடிக்கிறது. இதுவரை நடந்த மோதல்களில் 2,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது. தத்தம் நாட்டவரை மீட்கும் பணியில், பல்வேறு நாடுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply