காயமடையும் இராணுவத்தினரை அழைத்துவர போதியளவு விமானம் இல்லை: ரணில் விக்ரமசிங்க
வன்னி மோதல்களில் காயமடையும் இராணுவத்தினரை அழைத்துவருவதற்குப் போதியளவு போக்குவரத்து வசதிகளை அரசாங்கம் செய்துகொடுக்கவில்லையென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
காயமடையும் இராணுவத்தினரை வான்வழியாக அழைத்துவருவதற்கு இலங்கை விமானப்படையினரிடம் போதுமானளவு வானூர்திகள் இல்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.
பழுதடைந்திருக்கும் அன்டனோவ் விமானங்களைத் திருத்துவதற்கு விமானப்படை போதியளவு பணத்தை வழங்கவில்லையெனவும், இதனால் தற்பொழுது இரண்டு விமானங்களே பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்பொழுது அவர்கள் ஒரு அன்டனோவ் விமானத்தையும், ஒரு சி.130 விமானத்தையுமே பயன்படுத்துகின்றனர். இதில் எந்த இரகசியமும் இல்லை, இதைப் பற்றி விமானப் படைக்கும் தெரியும், விடுதலைப் புலிகளுக்கும் தெரியும் என ரணில் விக்ரமசிங்க கூறினார்.
விமானங்களைத் திருத்துவதற்கு விமானப்படையினரால் நிதியுதவி கோரப்பட்டாலும், அது அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுவிடும் எனச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், மிஹின் எயார் நிறுவனத்திற்கு ஏன் நிதியுதவி வழங்கப்படுகிறது எனக் கேட்ட அதிகாரிகள் சிலர் பதவி நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
எனினும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த குற்றச்சாட்டை ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன மறுத்துள்ளார். அரசாங்கம் போதியளவு நிதியுதவி வழங்குவதாகக் கூறினார்.
விமானப்படைத் தளபதிக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. விமானப்படைத் தளபதி கோரியிருக்கும் அனைத்தையும் அரசாங்கம் அவருக்கு வழங்கியுள்ளது” என அமைச்சர் பி.பி.சி. செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் பாதுகாப்புப் படைகளுக்கு 200 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியிருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் மேலும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply