வன்னியிலிருந்து தப்பி வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: மூவர் காயம்
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த மக்கள் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பதாகவும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த மூவர் வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாகவும் அரசாங்க அதிபர் கூறினார்.
கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்கள் மீது யார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்கள் என்பது பற்றி இதுவரை தெரியவரவில்லையென அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், இதுவரை கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருந்து 659 பேர் வவுனியாவுக்கு வருகை தந்திருப்பதாகவும், இவ்வாறு வந்த மக்கள் நெலுக்குளம் இடைத்தங்கல் முகாமிலும், செட்டிக்குளம் மெனிக்பாம் பொதுநோக்கு மண்டபம் மற்றும் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் அரசாங்க அதிபர் அலுவலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்திருக்கும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருப்பதுடன், செட்டிக்குளம் மெனிக்பாம் வீட்டுத் திட்டத்தில் முதற்கட்டமாக 100 குடும்பங்கள் அடுத்தமாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் மீள்குடியமர்த்தப்படவிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் கூறினார்.
நெலுக்குளம் இடைத்தங்கல் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களில் மூவருக்கு தைபோயிட் காய்ச்சல் பரவியிருப்பதாக வெளியான தகவலை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சார்ள்ஸ் மறுத்திருப்பதுடன், முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களுக்கு நடமாடும் மருத்துவசேவைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
தொற்றுக் காய்ச்சல்கள் பரவியிருப்பது தொடர்பாக வைத்தியர்களோ அல்லது சுகாதாரப் பிரிவினரோ தமக்கு எந்தவிதமான முறைப்பாட்டையும் செய்யவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply