இலங்கையில் இயல்பு நிலை லண்டனில் : பீரிஸ்
இலங்கையின் வெளியுறவு அமைச்சர், ஜி.எல்.பீரிஸ், திங்களன்று லண்டனில் , செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை போர் முடிந்த இரண்டாண்டு காலத்தில், போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு புனர்வாழ்வு நடவடிக்கைகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், அரசியல் சீர்திருத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளிலும் தமிழ்க்கட்சிகளுடன் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மோதல் காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக் ஆணைக்குழுவின் அறிக்கை விரைவில் சமர்பிக்கப்பட்டுவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
போர் முடிந்த இரண்டாண்டு காலம் என்பது மிகக் குறுகிய காலமே என்று கூறிய பீரிஸ் ஆனால், அந்த இரண்டாண்டுகளில் இந்த அளவுக்கு நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுத்திருக்கிறது என்றும், வடக்கே இயல்பு நிலை திரும்பியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
ஆனாலும், அமைச்சர் குறிப்பிட்ட இந்த மூன்று விஷயங்களிலுமே, அதாவது புனர்வாழ்வு நடவடிக்கைகள், அரசியல் சீர்திருத்தம் மற்றும் கடந்த கால நடவடிக்கைகளுக்கு பொறுப்பு சுமத்துதல் போன்றவைகளில் முன்னேற்றம் போதாது என்ற விமர்சனம் இருப்பதை சுட்டிக்காட்டிய போது அதற்கு பதிலளித்த பீரிஸ், அதனை மறுத்ததுடன், புனர்வாழ்வு நடவடிக்கைகளிலும் நல்லிணக்க நடவடிக்கைகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறினார்
நாட்டில் இயல்பு நிலை திரும்பியிருப்பதாகக் கூறும் நிலையில் உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுவதில் என்ன தாமதம் என்று கேட்டதற்கு பதிலளித்த அவர், அவற்றில் படிப்படியாகத்தான் முன்னேற்றம் ஏற்படும் என்றார் அவர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply