இந்தியாவின் நிவாரண உதவிகளுக்கு யாழ் ஆயர் நன்றி பாராட்டினார்.
வன்னியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கு இந்திய மத்திய மற்றும் தமிழ்நாட்டு அரசாங்கங்கள் நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைத்தமைக்கு, அண்மையில் வன்னிக்குச் சென்று திரும்பிய யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் நன்றி பாராட்டியுள்ளார். புலிகளுக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான மோதலில் சிக்குண்டிருக்கும் பொது மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளமையானது பாராட்டுக்குரியது என கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து அனுப்பிவைக்கப்படும் நிவாரணப் பொருள்கள் வன்னி மக்களுக்கு விநியோகிக்கப்படுவது பற்றி யாழ் ஆயர் தனது கடிதத்தில் விரிவாக எழுதியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ் மறைமாவட்ட ஆயர் உட்பட சில கிறிஸ்தவ ஆயர்கள் அண்மையில் வன்னிக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டுத் திரும்பியிருந்தனர்.
தமிழக அரசாங்கத்தால் அனுப்பிவைக்கப்பட்ட உடுதுணிகள் கொண்ட லொறிகளைத் தான் வன்னியில் பார்வையிட்டதாக யாழ் ஆயர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகள் மற்றும், இந்தியாவின் நிவாரணப் பொருள்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எவ்வாறு செல்கிறது என்பது பற்றியும் யாழ் ஆயர், இந்தியத் தூதரகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply