கிழக்கு மாகாணத்தில் படையினரும் பொலிஸாரும் சுற்றிவளைப்பு
கிழக்கு மாகாணத்தில் படையினரும் பொலிஸாரும் இணைந்து நேற்று பல பகுதிகளிலும் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். நீண்ட காலத்துக்குப் பின்னர் இத்தகைய சுற்றிவளைப்பு தேடுதல் இடம்பெற்றமையினால் இப்பகுதி மக்கள் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகினர். மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் நண்பகல் வரையிலும் இந்தத் தேடுதல் வேட்டை இடம்பெற்றது. அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில், திருக்கோவில், விநாயகபுரம் ஆகிய பகுதிகளிலும் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் இந்தத் தேடுதல் வேட்டை இடம்பெற்றது.
தம்பிலுவில், களுதாவளை பிள்ளையார் கோவிலிலிருந்து திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரம் வரையிலான கடற்கரை பிரதேசத்தில் நேற்று அதிகாலை 5 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரை சுற்றிவளைப்புத் தேடுதல் இடம்பெற்றது.
இராணுவத்தினர் வீடுவீடாகச் சென்று வீட்டிலுள்ள அங்கத்தவர்களின் விபரங்களை விசாரித்ததுடன் தேடுதலிலும் ஈடுபட்டனர்.
திருக்கோவில் பகுதியில் இடம்பெற்ற சுற்றிவளைப்பையடுத்து சங்கமன் கண்டி பிரதேசத்தை நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் சுற்றிவளைத்த படையினரும் பொலிஸõரும் அங்கும் தேடுதல் மேற்கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் படையினரின் சுற்றிவளைப்புக்கு இலக்காகியது. படுவான்கரையின் பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட சகல பகுதிகள் உட்பட வாகரை, கரடியனாறு, களுமுந்தன்வெளி மற்றும் மட்டக்களப்பு நகரையண்டிய பகுதிகளிலும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட களுதாவளைப் பகுதிகளிலும் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டது.
வீடுகளில் தேடுதல் நடத்திய படையினரும் பொலிஸாரும் வீதிகளில் பயணித்த வாகனங்களையும் சோதனைக்குட்படுத்தினர். குறித்த வாகன இலக்கங்களும் பதிவுசெய்யப்பட்டன.
இதேபோல் திருகோணமலை மாவட்டத்தில் நீண்ட காலத்திற்குப் பின்னர் நேற்று படையினரின் சோதனை நடவடிக்கை இடம்பெற்றது. படையினரின் இந்தத் திடீர் நடவடிக்கையினால் பிரதேச மக்கள் பெரும் பதற்றத்துக்கு உள்ளாகினார்கள்.
கவச வாகனங்கள் சகிதம் படையினர் திருமலை நகரின் புறநகர்ப் பகுதிகளான லிங்கநகர், பாரையூற்று, துவரக்காடு பகுதிகளில் சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்டனர். இதேபோன்று வெருகல் பிரதேசத்திலுள்ள பூநகர் பூமரத்தடிச்சேனை இலங்கைத்துறைமுகத் துவாரம் போன்ற பகுதிகளிலும் பெருமளவான படையினர் சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்டனர். இந்தப் பகுதியில் பயணித்த வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
யுத்தம் முடிவடைந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் படையினர் திடீரென சுற்றிவளைப்பு தேடுதலில் ஈடுபட்டமையினால் குறித்த பகுதி மக்களிடையில் பதற்றம் நிலவியது. மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை தொடர்பில் இந்த மாவட்டங்களில் கட்டளைத் தளபதி மகிந்த முதலிகேயுடன் தொடர்புகொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
மக்களை சிரமத்துக்குள்ளாக்காத வகையில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கட்டளைத் தளபதி தன்னிடம் தெரிவித்ததாக அரியநேத்திரன் எம்.பி. கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply