பிரச்சினை இல்லையென்றால் ஏன் அவசர காலச் சட்டம்: யோகேஸ்வரன்

இந்நாட்டில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும் எல்லா இன மக்களும் நிம்மதியாக வாழ்கின்றனர் என்றும் பல இடங்களில் கூறிவரும் ஜனாதிபதி மஹிந்த  ஏன் இன்னும் அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் எம்.பி தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தின் போதே எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

‘உண்மையில் இன்று கிழக்கில் சிவில் நிர்வாகத்தை பாதிக்கும் வகையில் பல அச்சுறுத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழ் இயங்கும் சில பிரதிநிதிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

அண்மையில், ஆரையம்பதி செயலகத்தில் அதிகாரிகள் தாக்கப்பட்டமை, ஒரு சில தினங்களுக்கு முன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் மருத்துவ மாது எச்சரிக்கைப்பட்டமையும் அதனை விசாரணை செய்யச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தருடன் தகராறு போன்ற செயற்பாடுகள் இடம்பெற்றன.

இந்நிலையில் மாதாந்தம் கொண்டுவரப்படும் இந்த அவசர காலச்சட்டமானது மக்களின் பேச்சு சுதந்திரம் அடிப்படை உரிமைகள் என்பவற்றை ஒடுக்கும் நடவடிக்கையாகவே உள்ளது. அவசரகாலச் சட்டம் தொடர்ந்து இருப்பது இந்நாட்டின் கௌரவத்திற்கு இழுக்காகும்.

எனவே அவசரககாலச் சட்டத்தை நீடிப்பதை விடுத்து அதிகாரத்தைக் கொண்டு சிவில் நிர்வாகத்தை குழப்பும் செயற்பாட்டை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் நடவடிக்கையாகும்” என தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply