புலிகளின் இராச்சியத்திலே சவக்குழிதான் நீதிமன்றம். துப்பாக்கிச் சனியன்தான் நீதிபதி.
சீமானும் செல்வியும்
– ஷோபாசக்தி
இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, பெ. மணியரசன் உள்ளிட்டவர்கள் அண்மையில் தமிழக அரசால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவர்களின் கைதுகளைக் கண்டித்தும் தமிழக அரசின் கருத்துச் சுதந்திர மறுப்பு எதோச்சதிகாரத்தைக் கடுமையாகச் சாடியும் வலைப்பதிவுகளில் தோழர்கள் எழுதிக் குவித்துள்ள கட்டுரைகளைப் படிக்கையில், கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தி நீண்ட நாட்களாகவே பேசியும் எழுதியும் வருபவன் என்ற முறையில் உள்ளபடியே எனது கண்கள் பனிக்கின்றன. இந்த வலைப் பதிவாளர்களல்லவா எனது தோழர்கள் எனத் திரும்பத் திரும்ப எனது உதடுகள் முணுமுணுக்கின்றன.
“நீ சொல்லும் கருத்தில் எனக்கு எள்ளளவும் உடன்பாடில்லை, ஆனாலும் அதைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமைக்காக எனது உயிரைக் கொடுத்துப் போராடவும் நான் தயார்” என்ற வோல்தயரின் புகழ்பெற்ற கூற்றை வெறுமனே வீம்புக்கு உச்சரிப்பவர்களில் நானும் ஒருவனல்ல. அந்தக் கூற்றை நான் முற்று முழுதாக விசுவாசிப்பவன். இந்திய அரசு, இலங்கை அரசு, அமெரிக்க அரசு என எது குறித்தும் எவர் வேண்டுமானாலும் தமது கருத்துகளைக் கூறலாம். அது ஆதரவாகவும் இருக்கலாம் அல்லது எதிராகவும் இருக்கலாம், எதுவாகவும் இருக்கலாம். அதைச் சொல்வதற்கு சாமான்யர்களுக்கும் தடையற்ற சுதந்திரம் வேண்டும். இதற்குப் பெயர்தான் முழுமையான கருத்துச் சுதந்திரம். அந்தக் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படும் போது தடைமீறலும், உருவப்பொம்மை எரிப்புகளும் காலணியால் மூஞ்சிக்கு எறிதலும் மக்கள் திரளின் இயல்பான போராட்ட வடிவங்களே! அவை அறம் சார்ந்த நெறிகளே!
விடுதலைப் புலிகளையும் தமிழ்த் தேசிய வெறியையும் நிராகரிப்பவன் என்ற முறையில் நான் சீமான் உள்ளிட்டவர்கள் மீதான எனது விமரிசனத்தை ஏற்கனவே வைத்துள்ளேன். அதே வேளையில் கொளத்தூர் மணி போன்ற திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்களின் பார்ப்பன எதிர்ப்பு, சாதியொழிப்பு, சமூகநீதிக்கான போராட்டம் போன்ற சீரிய அரசியல் பங்களிப்புகளை நாம் மறந்துவிட இயலாது. பார்ப்பனிய ஊடகங்களும் காங்கிரஸ் கட்சியினரும் இந்தக் கைதுகளை நியாயப்படுத்துவதன் பின்னணியில் அவர்களின் பாரம்பரியத் திராவிட இயக்க எதிர்ப்பும் ஒரு ஊக்கியாகச் செயற்படுவதையும் நாம் கவனிக்கலாம். உண்மையில் கொளத்தூர் மணி, சீமான் போன்றவர்கள் அரசியல் அதிகாரங்களற்ற சாதாரணர்கள். புலிகளுக்கு ஆதரவாகப் பேசும் பால் தக்கரேயையோ மருத்துவர் இராமதாஸையோ இப்படிக் கைதுபண்ணிவிட இந்திய அரசால் முடியுமா? இந்திய ‘ஒருமைப்பாட்டுக்கு’ பங்கம் விளைவிப்பவர்களைக் கைது செய்வதென்றால் நம்பர்1 பயங்கரவாதி நரேந்திர மோடியையல்லவா முதலில் கைதுசெய்ய வேண்டும்.
சீமான், கொளத்தூர் மணி போன்றவர்களின் கைதுக்காக இந்தச் சிலிர்ப்புச் சிலிர்ப்பவர்கள் இந்தியா முழுவதும் காலவரையற்றுச் சிறைகளில் வாடும் அல்லது ‘என்கவுண்டர்’களில் சுட்டுத்தள்ளப்படும் நக்ஸ்பாரிகள் குறித்தோ இஸ்லாமியர்கள் குறித்தோ காஷ்மீரிகள் குறித்தோ ஏன் எதுவும் பேசுவதில்லை என்றொரு கேள்வி சிலரால் எழுப்பப்படுகிறது. இந்தக் கேள்வி தருக்கத்துக்குப் பொருந்துமேயொழிய நடைமுறைக்கு உதவாது. தீபெத் மீதான ஆக்கிரமிப்பைக் கண்டிக்காதவர்கள் ஈராக் மீதான ஆக்கிரமிப்பைக் கண்டிக்கக் கூடாது, திண்ணியம் கொடுமை குறித்துப் பேசாதவர்கள் கயர்லாஞ்சிக் கொடுமைகள் குறித்துப் பேசக் கூடாது என்றெல்லாம் நாம் சொல்ல முடியுமா என்ன. குறிப்பிட்ட இந்த அநீதியைக் கண்டித்தாவது பேசுகிறார்களே என்று நாம் அவர்களை ஆதரிப்பதும் அவர்களோடு இணைந்து நாமும் குறிப்பிட்ட அநீதியைக் கண்டிப்பதும்தானே சரியாயிருக்க முடியும். ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிற அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும் என நாம் அவர்களிடம் கோர முடியும். குறிப்பிட்ட விடயத்தில் வெளிப்படும் அவர்களின் சனநாயக் குரலும் போராட்டப் பண்பும் உலகம் தழுவிய பார்வையாக விரிவடைய வேண்டும் என நாம் வேண்டிக்கொள்ள முடியும்.
முக்கியமாக சீமான், கொளத்தூர் மணி போன்றவர்களின் கைதுகளுக்காகக் கொந்தளிப்பவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக அல்லது அனுதாபிகளாயிருப்பதால் இந்தத் திடீர்க் கருத்துச் சுதந்திர போராளிகளுக்கு, கருத்துச் சுதந்திரத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் உள்ள பொருந்தாத் தொடர்பு குறித்து இங்கே சற்று விளக்கவதும் பொருத்தமானதே. “தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க, தூங்காது செய்யும் வினை” என்கிறது தமிழ்மறை.
தமிழக அரசால் கைது செய்யப்பட்டிருப்பவர்களுக்கு இம்முறை பிணை மறுக்கப்பட்டிருப்பினும் அடுத்தடுத்த தவணைகளில் அவர்கள் வெளியே வருவார்கள். கொளத்தூர் மணி வருவது தாமதமாக வாய்ப்புகளிருப்பினும் அவரும் வெளியே வருவார் என்பது நிச்சயம். இவர்கள் மீதான விசாரணைகள் நடந்தாலும் அது நீதிமன்றங்களில் பகிரங்கமாக நடத்தப்படும். இவர்களுக்குத் தங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்வதற்கும் தங்களுக்கென வழக்கறிஞர்களை அமர்த்திக்கொள்ளவும் வாய்ப்புகள் வழங்கப்படும். “மாங்குயில் கூவிடும் பூங்சோலை எம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை” எனச் சிறைச்சாலையைப் பூஞ்சோலையாக உருவகித்துச் சீமானும் மணியும் தாரளமாகப் பாடலாம். அப்படிப் பாடுவதுதான் திராவிட இயக்க மரபு. அப்படிப் பாட வாய்ப்புக் கொடுத்திருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் மரபு.
ஆனால் தோழர்களே புலிகளால் கைது செய்யப்பட்டவர்களின் நிலை என்ன? விஜிதரன் எங்கே? தில்லை எங்கே? தீப்பொறி கோவிந்தன் எங்கே முருகநேசன் எங்கே? மத்தியாஸ் எங்கே? சின்ன மெண்டிஸ் எங்கே? பதுமன் எங்கே? கையில் மாற்றுடைகளுடன் அன்ரன் பாலசிங்கத்தின் வீட்டுவாயிலில் உண்ணாவிரதம் இருக்கச் சென்ற மாத்தையா எங்கே? புலிகளின் சிறையில் ஒரே இரவில் அருணாவால் கொல்லப்பட்ட அய்ம்பத்தெட்டு உயிர்களுக்கும் வகையென்ன? பதிலென்ன? இப்படியாகப் புலிகளால் அவர்களின் சிறையில் சாகடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உயிர்களுக்கான நீதியை நாம் யாரிடம் கோருவது? இங்கே மாத்தையாவின் அரசியலுக்கோ சின்ன மெண்டிஸின் அரசியலுக்கோ வக்காலத்து வாங்குவதல்ல எனது நோக்கம். புலிகள் தங்களால் கைதுசெய்யப்படுபவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதைச் சொல்லவே மேலுள்ளவர்களை உதாரணம் காட்ட நேரிட்டது. பல்கலைக் கழக மாணவனாகட்டும் தங்கள் இயக்கத்தின் பிரதித் தலைவராகட்டும் எல்லா முரண்களையும் புலிகள் கொலைகளாலேயே தீர்த்து வைத்தார்கள். புலிகளின் இராச்சியத்திலே சவக்குழிதான் நீதிமன்றம். துப்பாக்கிச் சனியன்தான் நீதிபதி.
இன்று சீமானின் குரலும் கொளத்தூர் மணியின் குரலும் நசுக்கப்பட்டுவிட்டதாகத் துடிக்கிறோமே! அவர்களின் கருத்துச் சுதந்திர உரிமை பறிக்கப்பட்டுவிட்டதாகப் பதறுகிறோமே, இதே பதற்றமும் துடிப்பும் கொதிப்பும் புலிகளால் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டவர்களின் விசயத்திலும் நமக்கு இருக்க வேண்டுமல்லவா. தமக்கு உவப்பில்லாத கருத்துகளைச் சொன்னதால் புலிகளால் கொல்லப்பட்ட அறிவுஜீவிகளுக்கும் தொழிற்சங்கவாதிகளுக்கும் கலைஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் மாற்று இயக்கப் போராளிகளும் மிதவாதக் கட்சித் தலைவர்களுக்கும் கணக்கில்லையே! விஜயானந்தன், விமலேஸ்வரன், ராஜினி திரணகம, அ.அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், சின்னபாலா, அதிபர் இராசதுரை என்று எத்தனையோ மனிதர்களின் மாற்றுக் குரல்களை புலிகளால் துப்பாக்கியால் நிறுத்தியிருக்கிறார்கள். தொழிற்சங்கங்கங்கள், சாதி ஒழிப்பு அமைப்புகள் இடதுசாரிக்கட்சிகள் என எல்லாவகையான மாற்று அரசியல் இயக்கங்களும் புலிகளால் தடைசெய்யப்பட்டுள்ளன. புலிகளின் இந்தக் கருத்துச் சுதந்திர மறுப்பு ஈழத்தைத் தாண்டிப் புகலிடங்களுக்கும் பரவியது. சரிநிகர், தினமுரசு பத்திரிகைகள் புகலிட நாடுகளில் தடைசெய்யப்பட்டன. தொழிலாளர் பாதை, செந்தாமரை, மனிதம், தாயகம் போன்ற பல மாற்றுக் கருத்துப் பத்தரிகைகள் மிரட்டப்பட்டன. பத்திரிகையாளர்கள் தெருக்களில் வைத்துத் தாக்கப்பட்டார்கள்.
இம்முறை சீமான் கைது செய்யப்பட்டபோது ஆயிரம் முறை கைதாவதற்குத் தான் தயாராயிருப்பதாக அவர் முழங்கினார். செல்வியும் சீமானைப் போல கலைத்துறை சார்ந்தவர்தான். அவர் நாடக இயக்குனர், நடிகை மற்றும் கவிஞர். கவிதைக்கான சர்வதேச விருதான PEN விருதைப் பெற்றவர். புலிகளுக்கு மாற்றான கருத்துகளை அவர் பேசியதால் அவர் புலிகளால் கைது செய்யப்பட்டார். ஆனால் சீமானைப்போல “ஆயிரம் தடவைகள் சிறை செல்லவும் தயார்” என்று அவர் சொல்வதற்கு வாய்ப்புகள் ஏதுமிருக்கவில்லை. ஏனெனில் புலிகள் அவரை ஒரு தடவைதான் கைது செய்தார்கள், அப்படியே கொன்று புதைத்துவிட்டார்கள்.
நாங்கள் தமிழக அரசின் கைதுகளைக் கண்டிக்கிறோம். சீமான், கொளத்தூர் மணி ஆகியோரின் கைதால் கவலையுற்றிருக்கும் தோழர்களின் துயரில் நாங்களும் பங்கெடுக்கிறோம். புலிகளிடம் ஆயிரக்கணக்கானவர்களைப் பலி கொடுத்துவிட்ட துயரிலும் இனியும் பறிகொடுக்கப்போகும் பதற்றத்திலுமிருக்கும் எங்கள் உணர்வுகளிலும் பங்கெடுக்குமாறு அந்தத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறோம். புலிகளின் கருத்துச் சுதந்திர மறுப்புக்கு எதிராக இந்தத் தோழர்கள் வருங்காலங்களிலாவது குரல் கொடுக்க வேண்டுமென விரும்புகிறோம். இதன் முலம்தான் கருத்துச் சுதந்திரம் மீதான அவர்களது வேட்கை முழுமை பெறுமென வலியுறுத்தவும் விரும்புகிறோம்.
இரு பின்குறிப்புகள்:
1. சிறைச்சாலை, பூஞ்சோலை என்பதெல்லாம் சீமான், கொளத்தூர் மணி போன்றவர்களின் விவகாரங்களில் சாத்தியமானது. ஆனால் அப்சல் குரு போன்ற எண்ணற்றவர்களுக்கு இந்திய அரசு சட்டபூர்வமான உதவிகளைக் கூட மறுத்திருக்கிறது என்ற புரிதலுடனேயே இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.
2. புலிகளால் கொல்லப்பட்டவர்களின் பட்டியலைப் படிக்கும் ஒருவர் கொடுப்புக்குள் ஓர் ஏளனப் புன்னகையுடன் ‘துரோகிகள் கொல்லப்படத்தான் வேண்டும்’ என முணுமுணுப்பாரானால் அவருக்குக் கருத்துச் சுதந்திரம், வன்முறை எதிர்ப்பு, மணதண்டனை ஒழிப்புக் குறித்தெல்லாம் பேச எந்த யோக்கியதையும் கிடையாது என்பதை ஒருகணம் மனதில் நிறுத்திக்கொண்டு விட்ட இடத்திலிருந்து அவர் புன்னகையைத் தொடராலாம்.
– சத்தியக் கடதாசி
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply