இலங்கை தூதுவரின் அழைப்பை சர்வத்தேச மன்னிப்புச் சபை ஏற்றது

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய, நேரடிப் பேச்சுவார்த்தையொன்றுக்கு வருமாறு விடுத்த அழைப்பை சர்வதேச மன்னிப்புச் சபை ஏற்றுக் கொண்டுள்ளதாக இணையத் தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதேவேளை இலங்கைக்கு விஜயம் செய்ய தூதுக் குழுவொன்றுக்கு அனுமதி வழங்குமாறும் சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனைத் தளமாகக் கொண்ட சர்வதேச மனித உரிமைகள் குழுவின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் ஸேம் ஷரிபி, இதுதொடர்பில் விக்கிரமசூரியவுக்கு அனுப்பியுள்ள கடிதமொன்றில் ஏப்ரல் 18 முதல் 21 வரை அமெரிக்காவில் தங்கியிருக்கப் போவதாகவும், அவ்வேளை தூதுவரைச் சந்தித்து இலங்கை குறித்து கலந்துரையாட அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து மனித உரிமைகள் அமைப்பு பாதகமான முறையில் அறிக்கையொன்றை வெளியிட்டதன் பின்னர், நேரடிப் பேச்சுவார்த்தை யொன்றுக்கு வருமாறு விக்கிரமசூரிய, சர்வதேச மன்னிப்புச் சபைக்கு அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார்.

“இலங்கையில் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் சம்பந்தமான பேச்சுவார்த்தைக்கு வருமாறு சர்வதேச மன்னிப்புச் சபைக்கு தாங்கள் அண்மையில் விடுத்திருந்த பகிரங்க அழைப்புக்கு நன்றி தெரிவிப்பதுடன், கடந்த கால உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புடைத்தன்மை குறித்த சவால்களை அது ஈடுசெய்யக் கூடியதாகவும் அமையும். நான் ஏப்ரல் 18 முதல் 21ஆம் திகதி வரை அமெரிக்காவில் இருப்பேன். எனது விஜயத்தின் போது உங்களைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தினை வரவேற்கிறேன். உலகில் உள்ள உங்களது இலங்கைக் குழுவின் ஏனைய சக உத்தியோகத்தர்களையும் தாம் சந்தித்துள்ளோம்.’ என ஷரிபி தன் கடிதத்தில் தெரிவித்துள்ளதாக அந்த இணையத் தளம் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்தே பெரிதும் விமர்சித்துள்ள மனித உரிமைகள் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளது. இதுதொடர்பில் உறுதியானதும் நம்பத் தகுந்ததுமான அறிக்கைகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமைகள் குறித்த துஷ்பிரயோகங்களுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பினை ஏற்க வேண்டுமென அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 2006இல் அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, அதன் செயற்பாடுகளை இரண்டு வருடங்களுக்கு முன் சுருட்டி வைத்தது. ஆனால் அதன் முடிவுகள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை என்று சர்வதேச மன்னிப்புச் சபை ஞாபகப்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை மாத்திரமன்றி இலங்கையில் உள்ளவர்களையும் சந்திக்க சர்வதேச மன்னிப்புச் சபை ஆர்வம் கொண்டுள்ளதாகவும் எனவே இலங்கையில் மனித உரிமைகள் குறித்த முறையான மீளாய்வு நடத்தவும் அது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தமது தூதுக்குழுவுக்கு அனுமதி வழங்கவேண்டுமெனவும் இலங்கை அரசாங்கத்திடம் சர்வதேச மன்னிப்புச் சபை அனுமதி கோரியுள்ளதாகக் கூறியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply