கப்பம்பெறும் குழுக்களை ஒழிப்பதற்கான படை நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பம்
நாடு முழுவதும் உள்ள கப்பம் பெறும் குழுக்களை ஒழித்துக் கட்டுவதற்கான படை நடவடிக்கைகள் அடுத்த வாரம் தொடக்கம் தீவிரமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உறுதியளித்திருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பேலியகொடை நவீன மீன் வர்த்தகக் கட்டிடத்தில் இனிமேல் கப்பக் குழுக்களுக்கு இடமில்லை. விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேலியகொடை மீன் வர்த்தகர்கள் சங்கத்துடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார்.இங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,கடவுள் கால்வைக்க வேண்டிய இடத்தில் முட்டாள்கள் கால் வைத்ததால் பேலியகொடை மீன் வர்த்தக நிலையம் திறக்கப்பட்டு இரண்டாம் நாள் சர்ச்சைகள் ஆரம்பித்தன.
அப்பிரதேசத்திலுள்ள சில முக்கிய பிரமுகர்களின் பின்னணியில் கப்பக் குழுவினர் வியாபாரிகளிடமும் லொறிகள், உட்பட கூலியாட்களிடமும் கப்பம் பெற்றனர்.
இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டதோடு மீன்களின் விலையும் அதிகரித்தது. இது தொடர்பில் எனக்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக பாதுகாப்பு செயலாளரை தொடர்பு கொண்டு விடயத்தை தெரிவித்தேன்.
அவர் கோபாவேசப்பட்டு வர்த்தக சந்தையில் விசேட அதிரடிப்படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்தியதோடு கப்பம் பெற்ற குழுவினரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் பேலியகொடை நகர சபையின் பிரதி மேயரும் இருக்கின்றார். இன்று இவர்களுக்கு அரசாங்கம் தனது செலவில் உணவு வழங்கி அரசியல் பாடத்தை கற்பிக்கின்றது.
அத்தோடு கட்சி ரீதியாகவும் இவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.இனிமேல் இங்கு கப்பக்குழுக்களுக்கு இடமில்லை. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மக்கள் அச்சமின்றி அங்கு சென்று மீன்களை கொள்வனவு செய்ய முடியும்.
கப்பம் பெறுவதாலேயே மீன்களின் விலைகள் அதிகரித்தன. இன்று இது தடுக்கப்பட்டதும் விலைகள் குறைந்துள்ளன.
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன். அநீதி நடந்தால் தட்டிக் கேட்பேன் பாதுகாப்பு செயலாளரின் உடனடி நடவடிக்கையால் வியாபாரிகள் உட்பட அதனோடு தொடர்புபட்ட அனைவரும் நன்மையடைந்துள்ளனர்.எனவே, பாதுகாப்பு செயலாளருக்கு விசேடமாக எமது நன்றியைக் கூற கடமைப்பட்டுள்ளோம்.
இதேபோன்று நாட்டிலுள்ள அனைத்துக் கப்பம் பெறும் குழுக்களையும் ஒழித்துக் கட்டுவதற்காக அடுத்த வாரம் தொடக்கம் விசேட படை நடவடிக்கைகளை ஆரம்பிக்கப் போவதாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்க்கும் ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக கட்டியெழுப்ப முடியும். சாந்த ஜோன் மீன் சந்தையிலுள்ள மீன் தட்டுக்களை வியாபாரிகள் கொள்வனவு செய்து அதனை வாடகைக்கு கொடுத்து பணம் சம்பாதித்தனர்.
இவர்களுக்கு மீன்வாடை கூடத் தெரியாது. கஷ்டப்பட்டு மீன் வியாபாரத்தில் ஈடுபட்டோர் தினமும் கஷ்டத்திலேயே வாழ்ந்தனர்.
பல வருடகாலம் இவ்வாறு வியாபாரம் செய்து வந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கே பேலியகொடையில் கடைகள் வழங்கப்பட்டுள்ளன. பேலியகொடை கப்பச் சம்பவத்துடன் தனக்கு தொடர்பில்லை என அமைச்சரொருவர் கூறித்திரிகிறார்.
நாம் அவரது பெயரை குறிப்பிடவில்லை. எனவே, அவர் அந்த நடவடிக்கையில் ஈடுபடாவிட்டால் ஏன் அது தொடர்பில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மீன்பிடிக் கூட்டுத்தாபனத் தலைவர் மஹில் சேனாரத்ன, மீன்பிடி சங்க பிரதிநிதிகளான ஜயந்தகுரே, ஜயசிறி, ராஜ் பெர்னாண்டோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply