உலக வங்கி தனது உதவிகள் பயன்படுத்தப்படும் வழியில் ஒரு புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது
உலகின் கால்வாசி மக்கள் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் வாழுகின்ற நிலையில், கல்வி மற்றும் சுகாதாரத்தை விட ஸ்திரமான அரசாங்கங்களை உருவாக்குவதிலும், நீதித்துறையிலும், காவல் துறையிலும் அதிக நிதி செலவிடப்பட வேண்டும் என்று உலக வங்கி கூறுகிறது. நீதி மறுசீரமைப்பு என்பது மிலேனியம் அபிவிருத்தியின் இலக்குகளில் ஒன்றாக இல்லாத போதிலும், அந்தத் திசையில் உதவிகளை திருப்புவதில் முக்கிய கவனம் செலுத்தப்படாவிட்டால், வறுமை ஒழிப்பின் ஏனைய இலக்குகளான சுகாதாரம், மற்றும் கல்வி ஆகியன குறித்த இலக்கை எட்டமுடியாமல் போய்விடும் என்று உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.
மோதல்களால் ஏற்படும் பாதிப்புக்களை ஒழிப்பதற்காக அதிகம் செலவு செய்வதை விட, அத்தகைய மோதல்கள் வெடிக்காமல் தடுப்பதற்கும், அத்தகைய மோதல்கள் மீண்டும் ஏற்படுவதை தடுக்கவும், அதிக செலவு செய்யப்பட வேண்டும்.
அண்மைக்கால உள்நாட்டுப் போர்களில் 90 வீதமானவை, ஏற்கனவே கடந்த 30 வருடங்களாக உள்நாட்டுப் போர் இடம்பெற்ற நாடுகளிலேயே நடந்திருக்கின்றன. இந்த வன்செயல்களின் சுழற்சியை நிறுத்துவது மிகவும் கடினம் என்று அந்த அறிக்கை கூறுகின்றது. இதற்கு உதாரணமாக அது தென்னாப்பிரிக்காவையும், மத்திய அமெரிக்காவையும் சுட்டிக்காட்டுகின்றது.
குவாதீமாலாவைப் பொறுத்தவரை 1980 களில் அங்கு நடந்த உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்டவர்களைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமானோர், தற்போது அங்குள்ள குற்றக் குழுக்களின் கைகளால் இறக்கிறார்கள். வன்செயல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வறுமை 20 வீதம் அதிகமாக காணப்படுகின்றது.
ஆனால், இன்றுவரை ஊழலை ஒழிப்பதிலும், அரச நிறுவனங்களையும், நீதித்துறையையும் மறுசீரமைப்பதிலும், மிகக்குறைவான கவனமே செலுத்தப்பட்டுள்ளதாக உலக வங்கி கூறுகிறது.
உலகம் எதிர்கொள்கின்ற மிகவும் பெரிய அபிவிருத்திச் சவால் இது என்று இந்த அறிக்கையை எழுதிய சாரா கிளிஃப் கூறுகிறார்.
இதில் பல விடயங்கள் புதியவை அல்ல. பிரிட்டன் ஏற்கனவே தனது உதவிகளை மோதல்கள் இடம்பெற்ற நாடுககளை நோக்கி திருப்பியுள்ளது. ஏனைய நாடுகளும் இதனை செய்தால், நல்ல மருத்துவமனைகளுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும் செலவு செய்யும் நிதியை விட நல்ல பாதுகாப்பை உருவாக்குவதற்கு செலவு செய்யும் நிதி அதிகமாக இருக்கக்கூடிய ஒரு பெரிய அடிப்படை மாற்றமாக இது கருதப்படும்.
ஆனால், உலக வங்கியின் இந்த கொள்கை மாற்றத்தை, உகண்டாவில், தகவல்களின் ஊடாக அபிவிருத்தி என்ற இலக்கைக் கொண்டு செயற்படுகின்ற பனோஸ் என்னும் அமைப்பின் பிராந்திய இயக்குனரான, பீட்டர் ஒக்கபால் எதிர்க்கின்றார்.
அபிவிருத்திக்கு ஸ்திரமான அரசாங்கமும், நீதித்துறையும், சட்டம் ஒழுங்கும் மிகவும் முக்கியந்தான் என்ற போதிலும், அவையெல்லாம், தானாக பொதுமக்களின் மிகுந்த ஆதரவுடன் வரவேண்டும் என்று அவர் கூறுகிறார்.
வறுமை ஒழிப்புக்கான தனது உதவிகளை உலக வங்கி, ஸ்திரமான அரசாங்கத்துக்கும், நீதியையும் சமாதானத்தையயும் ஊக்குவிக்கவும் திருப்பிவிட்டால், அது தவறாகத்தான் முடியும் என்று கூறும் அவர், அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், இந்த மக்களின் இயலாமையை ஒழிப்பதற்கும், அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply