தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் இன்று

தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் இன்று நடைபெறுகின்றது.தேர்தல் வன்முறையையும் அசம்பாவிதங்களையும் தடுக்க தமிழ்நாடு பொலிஸாருடன் இணைந்து விசேட அதிரடிப்படையினர், கலகம் அடக்கும் அணியினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாரிய எதிர்பார்ப்புகள், அதிரடி பிரசாரங்கள், கட்சித் தாவல்கள், மத்தியில் பரபரப்பாக தேர்தல் நடைபெற்றாலும் தேர்தல் முடிவுகள் சுமார் ஒரு மாதத்திற்குப் பின் அதாவது மே 13ம் திகதிக்குப் பின்னரே வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் வாக்கெடுப்புகள் நடைபெற்று ஒரு மாதகாலத்துக்குப் பின்னரே வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெறுவதால் இதில் வாக்கு குளறுபடிகள் இடம்பெறும் என கட்சிகள் விசனம் தெரிவித்தாலும் தவிர்க்க முடியாத காரணங்களைக் கூறி இந்திய தேர்தல் ஆணையம், முடிவை மாற்ற இயலாது என அறிவித் துள்ளது.

இந்த தேர்தலில் வழமை போல இரு பெரும் திராவிடக் கட்சிகளான தி.மு.க. வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அ.தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் களத்தில் உள்ளன. இவை தவிர ப.ஜ.க மற்றும் ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன.

தமிழ்நாட்டின் ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா எல்லைகளை தேர்தல் நாளில் தற்காலிகமாக மூடவும் புதுச்சேரிக்கான எல்லைகளை தீவிரமாக கண்காணிக்கவும் தேர்தல் ஆணையமும் பொலிஸாரும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இரு மாநில வாக்குரிமை பெற்றவர் களினாலும், குண்டர்கள், தீவிரவாதிகள் சமூக விரோதிகள் தேர்தலுக்கு பங்கம் ஏற்படாத வகையில் இந்த எல்லை பாதுகாப்பு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் வாக்கெடுப்புகள் இன்று (13/04/2011) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்புக்காக மின்னணு இயந்திரங்களும் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் வாக்களிப்பு நிலையங்களில் தயார் நிலையில் உள்ளனர்.

இந்த தேர்தலிலும் பிரதான தலைவர்கள் அவரவர் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். கலைஞர் கருணாநிதி- திருவாரூர் தொகு தியிலும், ஜெயலலிதா- ஸ்ரீரங்கம் தொகு திலும், விஜயகாந்த்- ரிஷிவந்தியத்திலும், மு.க.ஸ்டாலின்- கொளத்தூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இவை தவிர, தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கொங்கு நாடு முன்னேற்ற கழகம் ஆகிய பிரதான கட்சிகள் போட்டியிடுகின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்தின் தே.மு.தி.க., இடதுசாரிகள் மற்றும் உதிரிக்கட்சிகள் போட்டியிடுகின்றன.

தேர்தல் களத்தில் வழமையாக கொள்கை முழக்கங்களால் பிரகாசிக்கும் வைகோ இந்த முறை சுருங்கிப் போய்விட்டார். அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து தூக்கி வீசப்பட்ட வைகோ இறுதி நேரத்தில் எந்த கூட்டணியிலும் சேரமுடியாது தனித்துப் போனார். பின்னர் தேர்தலை புறக்கணிக்கவும் முடிவெடுத்தார்.

மேலும், தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. முன்னணி வகித்தது நகைச்சுவை நடிகர் வடிவேலின் மேடை முழக்கங்கள் நடிகர் விஜயகாந்துக்கும் அவரது தே.மு.தி.க.வுக்கும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியதால் பல சர்ச்சைகளை தோற்று வித்தன. எனினும் தி.மு.க. சளைக்கவில்லை. மேலும் தி.மு.க. சார்பில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க. கூட்டணியினர் தி.மு.க.வை முறியடிப்பதற்காக அதன் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு சம்பங்களை பிரசாரத்துக்காக பயன்படுத்தின. குறிப்பாக மின்வெட்டு, மணல் கொள்ளை, கிரனைட் பாறை கொள்ளை, 2ஜி ஸ்பெக்ரம் ஊழல், உள்ளிட்ட பிரச்சினைகளை பேசு பொருளாக வைத்து தி.மு.க. முறியடிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டது. இந்தப் பின்னணியில் இன்று தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் நடைபெறுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply