பொலிஸ் – பொது மக்கள் நல்லுறவு வளர வேண்டும்

புத்தாண்டு தினத்திலும் அதற்கு முந்திய நாளிலும் பொலிஸார் செய்த நற்பணிகளை நாம் பகல் பொழுதிலும், இரவு வேளையிலும் பொது இடங்களில் அவதானிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தோம். அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொழும்பிலும், ஏனைய பிரதான நகரங்களிலும் பொலிஸார் தங்கள் சீருடையுடன் பாதுகாப்பு கடமைகளிலும் வாகனப் போக்குவரத்தை நெறியாக வழிநடத்தும் கடமைகளிலும் ஈடுபட்டு வந்தார்கள்.

ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தரை பார்த்தவுடன் மனதில் இரண்டு எண்ணங்கள் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படுவதுண்டு. முதலில் பொலிஸாரைப் பார்த்தவுடன், மக்களுக்கு மனதில் பயம் ஏற்படும். அடுத்தபடியாக அவர்களைப் பார்த்து மனதிற்குள் பெரும்பாலானோர் சபிக்கவும் தவறமாட்டார்கள்.

இப்படியான ஒரு சம்பவம் கதிர்காமத்தில் புத்தாண்டு தினத்தில் நடந்தது. ஒரு அப்பாவி ஏழை தனது சைக்கிளில் கதிர்காம ஆற்றுக்கு மேல் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாலத்தில் வந்துகொண்டிருந்ததைக் கண்ட ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் அந்த மனிதனை காது கூசக்கூடிய சொற்களால் ஏசி, கன்னத்தில் அறையும் அளவிற்கு ஆத்திரம் கொண்டார்.

சில வினாடிகளுக்கு பின்னர், கையில் தங்கச் செயின்களும், கழுத்தில் தங்க மாலையும் போட்டிருந்த இன்னுமொருவர், இதே பாலத்தின் மீது மோட்டார் சைக்கிளில் வந்ததை பார்த்த அதே பொலிஸ்காரர் அந்த மனிதனுக்கு எதுவுமே சொல்லாமல் மெளனமாக நின்று கொண்டிருந்தார்.

இவ்விதம் தான் சில பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடமைகளை செல்வந்தவர்களுக்கு ஒருவிதமாகவும், ஏழைகளுக்கு ஒருவிதமாகவும் பாரபட்சமான முறையில் செய்கிறார்கள்.

பொலிஸாரும் மனிதர்கள் தான். அவர்களுக்கும் குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களுக்கும் புத்தாண்டு கொண்டாட்டங் களில் தங்கள் உற்றார் உறவினர்களுடன் குதூகலிப்பதற்கான ஆசையும் இருக்கும். என்றாலும், பொலிஸார் தியாக உணர்வுடன் இது போன்ற முக்கிய நாட்களில் அனேகமாக 24 மணி நேரமும் கடமையில் ஈடுபட்டு, மக்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். மலர்ந்துள்ள புத்தாண்டில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் மக்களை மக்களாக மதித்து, அவர்களை கெளரவமாக நடத்த வேண்டும்.

அதே நேரத்தில் குற்றமிழைத்தவர்களையும் பொலிஸார் தண்டிக்க வேண்டிய தங்கள் கடமையை விட்டுக்கொடுக்கவும் கூடாது. பொது மக்களும் பொலிஸாரை எந்நேரமும் தங்கள் எதிரிகளாக நினைத்து, வெறுக்கக் கூடாது. அவர்களும் மனிதர்கள்தான்.

அவர்களும் மனித உணர்வுகளுக்கு உட்பட்டவர்கள் தான். நீண்ட நேரம் வெயிலில் நின்று கொண்டு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதனால் சில சந்தர்ப்பங்களில் பொலிஸாரும் ஆத்திரமடைந்த நிலையில் சிலரை தண்டிப்பதும் உண்டு.

இவை அனைத்தையும் மனித நற்பண்புகளை மதித்து நடக்கும் பொலிஸாரும், பொது மக்களும் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்தால், பொலிஸாரைப் பார்த்து தங்கள் எதிரிகளாக நினைக்கும் மக்கள் அவர்களை நண்பர்களாக பார்ப்பார்கள். அந்த ஒரு புதுயுகம் இந்த புத்தாண்டிலாவது எங்கள் நாட்டில் ஏற்பட வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply