ஐ. நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஆதாரமற்ற தகவல்களை கொண்டது : பேராசிரியர் திஸ்ஸ விதாரண
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு வெளியிட்டிருக்கும் இலங்கை தொடர்பான அறிக்கை போலியான தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என விஞ்ஞான விவகாரத்துறை சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். புலி ஆதரவாளர்கள் வழங்கிய போலியான தகவல்களைக் கொண்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிறுத்தும் நோக்குடனேயே இது தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் இறைமையை மீறும் வகையிலேயே ஐ.நா. செயலாளர் நாயகம் நிபுணர்கள் குழுவை நியமித்திருந்தார். இக்குழு தற்பொழுது இலங்கையின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் போலியான தகவல்களை உள்ளடக்கிய அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் சிரேஷ்ட அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையை இலங்கை புத்திஜீவிகளும் கண்டித்துள்ளனர். இலங்கையின் உள்விவகாரத்தில் எந்தவொரு வெளிசக்தியும் தலையிட இடமளிக்க முடியாது என சப்ரகமுவ பல்கலைக்கழகத் தின் வேந்தர் பேராசிரியர் கும்புளுகமுவே வஜ்ர தேரர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. நிபுணர்கள் குழுவின் பின்னணியில் சில புலி ஆதரவுக் சக்திகள் இருப்பதாக அநுராதபுர பிக்குகள் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பத்தகம குணேஸ்வர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்பொழுது அனைத்து சமூகங்களும் இணைந்து சமாதானமாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்து வரும் நிலையில், இதனைக் குழப்புவதற்கு சில சக்திகள் முயற்சி செய்வதாக அனைத்து சமய ஒற்றுமைக்கான அமைப்பைச் சேர்ந்த அருட் தந்தை சரத் ஹெட்டியாராய்ச்சி கூறியுள்ளார்.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு நீதிபதிகளையும் கேட்காமல் ஐ. நா. நிபுணர்கள் குழு இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பதாக சிரேஷ்ட சட்டத்தரணி கொமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply