ஐ.நா நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக குரல் கொடுக்க அனைவரும் அணி திரள வேண்டும் : சஜித்
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக குரல் கொடுக்க அனைவரும் அணி திரள வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.இலங்கை இராணுவப் படையினர் சர்வதேச நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவதனை தடுத்து நிறுத்த அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை இலங்கைப் படைவீரர்களுக்கு எதிரான வகையில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் இராணுவத்தினர் மீது அரசாங்கம் காட்டி வரும் ஆதரவினை இந்த நடவடிக்கை மூலம் வெளிப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொள்வதற்கு இது உரிய தருணமல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு எதிராக இணைந்து செய்றபட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நிபுணர் குழு தொடர்பில் அரசாங்கம் குறுகிய கால அடிப்படையிலான வெளியுறவுக் கொள்கைகளை பின்பற்றியதாகவும் அதன் விளைவினை இன்று அனுபவிக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கேள்விக் குறியாக அமைந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அமைப்பதனை தடுத்து நிறுத்துவதற்கு அணி சேரா நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தவறியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத் தரப்பினரை சந்திக்க இடமளிக்கப்பட மாட்டாது என பகிரங்கமாக அறிவித்து இரகசியமான முறையில் நிபுணர் குழுவிற்கும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் நோக்கங்களுக்காக படைவீரர்களை எந்த சந்தர்ப்பத்திலும் தாம் காட்டிக் கொடுத்ததில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக் கருத்துக்கள் தமது நிலைப்பாடு எனவும், கட்சியின் நிலைப்பாடாக கருத முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் இந்த விடயம் பற்றி பேசப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply