புதிய சமாதானப் பேச்சுக்கு புலிகள் தயார் : பா.நடேசன்
இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக புலிகள் சர்வதேச செய்திச் சேவையொன்றுக்குத் தெரிவித்துள்ளனர். புதிய சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தாம் இழக்கவில்லையென புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஏ.பி. செய்திச் சேவைக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கியிருக்கும் செவ்வியில் கூறியுள்ளார். “நாம் எப்பொழுதும் சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தயார். ஆனால் இலங்கை அரசாங்கமே எப்பொழுதும் இராணுவ ரீதியான தீர்வை மாத்திரம் கடைப்பிடித்து வருகிறது” என்றார் அவர்.
புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி கைதுசெய்வோம் என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அண்மையில் கூறியிருந்தார். இந்த நிலையில், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயார் என புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் அறிவித்துள்ளார்.
மிக அண்மையில் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்படும் எனத் தாம் கருதவில்லையெனக் குறிப்பிட்டிருக்கும் நடேசன்,“எமது மக்களைப் பாதுகாப்பதற்கும், எமது படை வலிமையை பலப்படுத்துவதற்காகவும் நாம் பல தந்திரோபாயப் பின்வாங்கல்களை மேற்கொண்டுள்ளோம். சரியான காலமும், நேரமும் கூடிவரும்போது நாம் இழந்த நிலங்களை மீண்டும் மீட்டுக்கொள்வோம்” என ஏ.பி.க்கு வழங்கியிருக்கும் செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
தாயகப் பிரதேசத்திலிருந்து விரட்டப்பட்டுவிடுவோம் எனத் தாம் கருதவில்லையெனச் சுட்டிக்காட்டியிருக்கும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர், அவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறுமாயின் பிரச்சினை தொடர்ந்துகொண்டே இருக்கும் எனத் தெரிவித்தார். “எல்லா வகையிலான மோதல்களுக்கும் நாம் பழக்கப்பட்டுள்ளோம். எமது மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படும்வரை எமது போராட்டத்தைத் தொடர்வோம்” என்றார் பா.நடேசன்.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனையும், அவருடைய அமைப்பையும் திருப்திப்படுத்துவதற்கு கடந்த மூன்று தசாப்தகாலமாக தாம் முயற்சிக்கின்றபோதும், அது பலனளிக்கவில்லையென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார். ஆயுதங்களைக் கைவிட விடுதலைப் புலிகள் மறுத்தால், எமது நிலைப்பாட்டிலிருந்து ஒரு அடிகூட நகரமாட்டோம் என அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply