அறிக்கையினை நிராகரித்தால் புலிகள் போர்க்குற்றம் புரியவில்லை என போலாகிவிடும்

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கையினை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்குமானால் விடுதலைப்புலிகள் போர் குற்றம் புரியவில்லை என கூறுவதாக அமைந்து விடும் எனவே ஐ.நா வின் அறிக்கையினை நாம் நிபந்தனையுடன் ஏற்றுக் கொள்கிறோம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி. யான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் போர் குற்றம் புரிந்துள்ளார்கள் என்பதனை நாம் முழுமையாக ஏற்றுக் கொள்ளும் அதேவேளை இலங்கை இராணுவம் போர் குற்றம் புரிந்துள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். நேற்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கம் ஐ.நா. வின் அறிக்கையினை முழுமையாக நிராகரிப்பதாகவும் அது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ச கோரியிருந்தார்.

விமல் வீரவன்ச போல ஐக்கிய தேசிய கட்சியினால் கருத்து கூற முடியாது. அவர் எதனையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமலேயே கருத்து வெளியிடுவார். அதே போலவே ஐ.நா. வின் அறிக்கை தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஐ.நா. வின் அறிக்கையினை முறையாக படிக்காமையினாலேயே அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து வெளியிடுகிறார். அவருடைய குரல் வளத்துக்கு ஏற்ப அறிவு மட்டும் இல்லையென்பதை இது எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

விடுதலை புலிகள் போர் குற்றம் புரிந்தமை தொடர்பிலும் ஐ.நா வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நாம் அதனை ஏற்றுக்கொள்கிறோம். அரசாங்கமோ விமல் வீரவன்சவோ கூறுவதை போல ஐ.நா வின் அறிக்கையினை முழுமையாக எதிர்த்தால் விடுதலைப்புலிகள் போர்க் குற்றம் புரியவில்லை என கூறுவதாகவே அமையும்.

ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையினை முழுமையாக படித்து விட்டு அதற்கு ராஜதந்திர ரீதியிலான அணுகு முறையினை கையாண்டு முடிவெடுக்க வேண்டுமே தவிர அதற்கெதிராக ஆர்ப்பாட்டங்களையோ ஊர்வலங்களையோ நடத்துவதில் பயனில்லை என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply