ஐநா அறிக்கை குறித்து சங்கரி ஜனாதிபதிக்கு ஆலோசனைக் கடிதம்

இலங்கை தொடர்பில் ஐநா நிபுணர் குழு விடுத்துள்ள அறிக்கை குறித்து மூத்த அரசியல்வாதி என்ற அடிப்படையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு மிக நீளமான கடிதமொன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் முழு வடிவம் கீழே காணப்படுகிறது.

மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ், 2011.04.25 இலங்கை ஜனாதிபதி, அலரி மாளிகை, கொழும்பு. பான் கீ மூனும் ஐக்கிய நாடுகள் சபையுடனான இலங்கையின் உறவும்.
 
கௌரவ ஐனாதிபதி அவர்களே, இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள மிகவும் ஒரு இக்கட்டான நிலைமையை நன்கு பரிசிலித்த பின் அவசர அவசரமாக தயாரிக்கப்பட்ட அறிக்கையோடு பத்திரிகை காரியாலயத்துக்குச் விரைந்து செல்லாது விடுதலைப் புலிகள் 2009 மே மாதம் தோற்கடிக்கப்பட்டதிலிந்து காத்துவந்த எனது மௌனத்தை கலைத்து விட்டு இக் கடிதத்தை தங்களுக்கு வரைகின்றேன். தற்போது ஏற்பட்டுள்ள இச் சச்சரவில் கலந்து கொண்டு மேலும் இந் நிலைமையை மோசமடையச் செய்யாது, மாறாக எவ்வவாறு அதனை சீர் செய்ய முடியும் என பார்ப்பதே எனது நோக்கமாகும்.
 
தங்களுக்கு எந்த விடயத்திலும் ஆலோசனை வழங்கும் முதுமை எனக்குண்டு என எண்ணுகின்றேன். விரைவிலோ அன்றிக் காலதாமதமாகவோ ஏற்படவுள்ள பெரும் அனர்த்தத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற எனது இந்த ஆலோசனைகளை கவனத்தில் எடுப்பீர்கள் என நம்புகின்றேன். நான் நேசிக்கும் எனது நாட்டுக்கும் அதில் வாழும் மக்களுக்குமாக எனது கடமையை செய்யும் பணியில் இறங்குகின்றேன்.
 
இச்சந்தர்ப்பத்தில் எனது விசுவாசமான ஆலோசனையை ஏற்று, முதலாவதாக நாடுமுழுவதிலும் கண்டபடி ஆர்ப்பாட்டங்களோ அன்றி எவ்விதமானவெரு எதிர்ப்புக்களையும் முன்னின்று நடத்த எவரையும் அனுமதித்து நிலைமையை மேலும் மோசமடைய செய்யவேண்டாம் என்றும், பான் கீ மூனின் ஆலோசகர்கள் சமர்ப்பித்த அறிக்கையை வெளியிட அனுமதித்து அதனை எதிர்நோக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளுகின்றேன்.
 
பிறரால் தூண்டப்படும் விளைவுகளைப்பற்றி அறிந்திராத சாதாரண மக்கள் எல்லை மீறி செயற்பட்டு பெரும் நட்டத்தை ஏற்படுத்தலாம். ஐக்கிய நாடுகள் சபை கூட அறிக்கையை வெளியிடாது விட்டாலும் அவ்வறிக்கை எப்படியோ பத்திரிகைகளை போய்ச்சேரும். அப்பட்சத்தில் எதிர்பார்க்கும் விளைவுகளுக்கு மாறாகவே அமையும்.
 
கௌரவ பான் கீ மூன் அடிப்படையில் ஒர் சாதாரண மனிதர்தான். ஆனால் அவர் வகிக்கும் பதவி இரண்டாவது உலகயுத்தம் முடிந்தபின்னர் விசேடமாக சர்வதேச சமாதானம் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை முன்னெடுப்பற்காக 150ற்கும் மேற்பட்ட நாடுகளை அங்கத்தவர்களாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு உலகலாவிய அமைப்பாகிய ஐக்கிய நாடுகள் சபையின் மிகப் பெரிய கௌரவம் மிக்க செயலாளர் பதவியாகும்.
 
இந்த தாபனமானது சில வல்லரசுகள் தவிர்ந்த நாம் உட்பட எந்த நாடும் பகைக்க முடியாத ஒன்றாகும். இன்றைய உலகம் பல்வேறு விடயங்களுக்கு ஐக்கிய நாடுகள் தாபனத்தையே பிரதானமாக நம்பியிருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபை தனது பல்வேறு உப நிறுவனங்கள் முலம் சகல நாடுகளுக்கும் பெரும் உதவியாக இருந்து வருகின்றது.
 
நம் நாடு உட்பட சகல நாடுகளும் பொருளாதார அபிவிருத்தி கல்வி சுகாதாரம் கலாச்சாரம் போன்ற மற்றும் பல்வேறு தேவைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையையே எதிர்பார்த்திருக்கின்றன. அங்கத்துவ நாடுகள் தமக்குள் பல்வேறு உதவிகளை புரிந்துவருகின்றன. பான் கீ மூன் ஓர் தனிமனிதர்;. ஆனால் அவரின் செயற்பாடுகள் அத்தனையும் அவர் செயலாளர் நாயகம் என்ற பதவியை வகிக்கும் வரை ஐநா சபையின் செயற்பாடாகவே கொள்ளப்படும்.
 
உலக நாடுகளில் சகலதும் எமது நட்பு நாடாகவே இருந்து பல்வேறு உதவிகளை புரிந்தாலும் ஒரு சில புற நீங்கலாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரை ஆதரிப்பார்களே அன்றி தனிப்பட் நபர் பான் கீ மூன் என்பவரை அல்ல.
 
ஐனாதிபதி அவர்களே யுத்தம் முடிந்தது என அரசு அறிவிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நான் அனுப்பிய கடிதத்தை “யுத்தம் முடிந்துவிட்டது ஆனால் அதற்கு கொடுக்கப்பட்ட விலையென்ன? பெறுமதிமிக்க உயிர்கள் இழக்கப்பட்டன மக்கள் அனுபவித்த வேதனைகளின் பெறுமதியை கணிக்க முடியாதென ஆனந்தசங்கரி கூறுகின்றார்” என்ற தலைப்புடன் 2009ம் ஆண்டு 17ம் திகதி வெளிவந்த ஐலன்ட் நாளேடு பிரசுரித்திருந்தது. இன்றைய நிலைக்கு பொருத்தமானதாக இருக்கும் என அக்கடிதத்தின் சில பகுதிகளைக் கீழே தருகின்றேன்.
 
“முள்ளிவாய்க்காலில் வாழ்க்கை கொடூரமானது. ஓர் புதிய பாதுகாப்பு வலயம் ஏற்படுத்தினாலும் கூட விடுதலைப்புலிகள் அதற்குள் புகுந்து மக்களுடன் மக்களாக கலந்து நிற்பதை யாராலும் தடுக்க முடியாது எனக்கு கிடைக்கும் செய்திகள் அனைத்தையும் நம்பினதால் அவற்றை கண்டிப்பாக உங்கள் முன் கொண்டுவர வேண்டியது எனது கடமையாகும்.
 
12ம் திகதி ஷெல் அடியில் அகப்பட்டு 36 பேர் உயிரிழந்துள்ளனர். 13ம் திகதி நோயாளிகள் ஏறக்குறைய 50 பேர் உட்பட ஏனைய பலருடன் இருநாட்களாக போதிய ஊழியரின்மையால் எதுவித வைத்திய வசதியின்மையாலும் ஷெல்லடியாலும் இறந்துள்ளனர். இதனிலும் கொடுமையென்னலென்றால் அவர்கள் அனைவரும் உணவின்றி பட்டினி கிடந்தமையாகும். இந்த நிலை மாறவேண்டும்”
 
“கடந்த இரண்டு மூன்று வாரங்களுக்குள் பல உயிர்கள் பறிக்கப்பட்டுள்ன. இம்மரணங்களுக்கு யார் பொறுப்பு என்பதல்ல பிரச்சனை.”இம்மக்கள் இவ்வாறு இறந்தார்கள்” என எதிர்கால சந்ததியினர் திரும்பத்திரும்ப கேட்கப் போகின்றனர். நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் இவ்வாறு மீட்கும் பணியில் ஈடுபடும் போது கண்டிப்பாக ஒரு உயிரின் இழப்பு கூட நேரக்கூடாது என்றும் துவக்குச் சூட்டால் கூட ஒரு உயிர்தானும் இறக்கக்கூடாது என்று சம்மந்தப்பட்டவர்களுக்கு தயவு செய்து கண்டிப்பாக கூறிவையுங்கள்.”
 
“நான் எனது பூரண ஒத்துழைப்பை நீங்கள் ஈடுபடும் சகல நல்ல நடவடிக்கைகளுக்கும் தர வேண்டும் என்றும் அத்துடன் எப்பாடுபட்டேனும் போதிய உணவை அம்மக்களுக்கு அனுப்பி வைக்கும் படியும் ஷெல் அடியை நிறுத்தி அப்பாவி பெண்கள் முதியோர் மற்றும் பிள்ளைகளை காப்பாற்றும்படியும் வேண்டுகின்றேன்” என அக்கடிதம் முடிகிறது.
 
யுத்த காலத்தின் போது பல்லாயிரக்கணக்கானவர்கள் பாதிப்படைந்திருந்தனர். இந்த நிலைக்குப் பல காரணங்கள் உண்டு. ஏவ்வாறு அல்லது ஏன் இவ்வாறு நடந்தது. இவை எல்லாம் வெளிச்சத்திற்கு வர வேண்டும். நான் அரசாங்கத்திற்கோ அன்றி விடுதலைப்புலிகளுக்கோ துதிபாடுபவனோ அல்லது எடுபிடியோ அல்ல. நான் அடிக்கடி உங்களின் நடவடிக்கைகள் சிலவற்றையோ அன்றி புலிகளின் நடவடிக்கைகளையோ சுட்டிக்காட்டி கண்டிக்கத் தவறவில்லை.
 
எனது அபிப்பிராயப்படி உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளாத போதும் உங்களை திருப்திப்படுத்தும் ஒரே நோக்கோடு உங்களுக்கு நெருகியவர்கள் மற்றும் அவ்வாறு நடிப்பவர்கள் உங்கள் பெயரையும் புகழையும் களங்கப்படுத்தும் என்ற உணர்வின்றி மகிந்த சிந்தனையின் புகழைப்பாடினர். இதனால் மக்களின் மத்தியில் மகிந்தசிந்தனை வலுவிழந்த அல்லது களங்கப்படுத்தப்பட்ட மகிந்த சிந்தனை என கருத்து நிலவுகின்றது. இவ்வாறு நான் கூறுவதற்கு என்னை மன்னிக்கவும்.
 
இவ்வாறுதான் சிலர் தமது சிந்தனையை கடத்தி வந்து மகிந்த சிந்தனை என விற்கின்றனர். சிலர் தம்மெண்ணப்படி அறிக்கைகளை விடுத்து தங்களுக்கும் சில சங்கடங்களை உண்டுபண்ணி அவை உங்கள் கருத்தென ஏற்க நிர்ப்பந்திக்கின்றனர்.
 
ஆனால் அவற்றை உண்மையில் நீங்களாகவே மறுத்திருப்பீர்கள் அல்லது மறுக்கவைக்கப்பட்டிருப்பீர்கள். அல்லாவிடின் அதற்கு நேர் எதிரான கருத்தை கூறியிருப்பீர்கள். இந்நாட்டு மக்கள் நிறைவேற்று அதிகாரமிக்க தலைவராக உங்களைமட்டும்தான் தெரிவுசெய்தார்கள். இப்பதவி ஒருவரால் அடையக்கூடிய மிகவுயர்ந்த அதிகாரமிக்க பதவியாகும்.
 
ஆகவே ஒருவர் உங்களிடம் எவ்வளவு அன்பாகவோ அல்லது நெருக்கமாகவோ இருந்தாலும் அவரை உங்களின் அதிகாரத்தை அபகரிக்கவோ அல்லது அத்துமீறி துஷ்பிரயோகம் செய்யவோ அனுமதிக்க வேண்டாம். இறைமையுள்ள இந்த நாட்டின் தலைவனும் நாட்டின் காவலனும் நீங்களே. நீங்கள் சில பொறுப்புள்ள பதவி வகிப்பவர்கள் இன்று ஒரு கதையும் மறுநாள் வேறு ஒரு கதையும் கூறுவது விசேடமாக சர்வதேசம் விமர்சிக்கும் விடயமாகும்.
 
ஒருசில அதீக உற்சாகம் கொண்டவர்களின் முறையற்ற தலையீடுகளும்; கூற்றுக்களும் சர்வதேசத்தின் கணிசமான பகுதியினரின் வெறுப்பைச் சம்பாதித்துள்ளீர்கள். இத்தகைய தப்பான கையாளுகையே இன்றைய இவ் இக்கட்டான நிலைக்கு காரணமாகும்.
 
2009.03.09 அன்று உங்களுக்கும் 2009.03.12 அன்று திரு.பிரபாகரனுக்கும் மற்றும் 2009.01.11 அன்று என்னால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இருந்தும் சில பகுதிகளை தற்போதைய தேவைகருதி தருகின்றேன். இவை எல்லாம் எவ்வாறு இப்பிரச்சனையை கையாள வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாக உதவும்.
 
1. 2009.03.09 அன்று ஐனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் இருந்து

“ஈழப்போரின் இறுதி முடிவு இந்த வாரத்துக்குள் கிடைத்து விடுமெனவும் அடுத்து வரும் 72 மணித்தியாலயங்களும் விடுதலைப் புலிகளுக்குக் கஷ்டமான காலமெனவும் பாதுகாப்புப் படையினரால் தெரிவிக்கப்பட்ட கருத்து எனக்குப் பெரும் பீதியை உண்டு பண்ணியுள்ளது. நான் விடுதலைப் புலிகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. எனது சிந்தனையின் முன்னிலையில் நிற்பது எமது நாட்டினதும், நாட்டு மக்களினதும் அக்கறையே.”
 
“மிக பயங்கரமான நிலைமை தவிர்க்கப்படுவதற்கு இராணுவத்தினர் விமானம் மூலம் குண்டு பொழிவதனையும் ஷெல், பீரங்கி மூலம் தாக்குவதனையும் உடன் நிறுத்த வேண்டும். இப்படி ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளதென்பதனை ஜனாதிபதி அவர்கள் ஏற்றுக் கொண்டால் உடனடியாக தலையிட்டு இந்த அவல நிலையை நிறுத்த முன்வரவேண்டும்.”
 
2. 2009.03.12 அன்று திரு பிரபாபகரனுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து

“உமது கட்டுப்பாட்டின் கீழ் நீர் வைத்திருக்கும் 81,000 குடும்பங்களைச் சேர்ந்த, மூன்று இலட்சத்து முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்களின் சாபம் உம்மை நிம்மதியாக வாழவிடாது. உம்மையும் உமது சந்ததியினரையும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இன்றும் உம்மை தொடர்ந்து ஆதரிப்பவர்களையும், அவர்களின் சாபம் விட்டுவைக்காது. இப்போதாவது உமது மனதை மாற்றி நீர் தடுத்து வைத்திருப்பவர்களை விடுதலை செய்யும்படி கேட்கின்றேன். அம்மக்கள் பட்டினியால் இறக்க ஆரம்பித்து விட்டனர். அதற்கு முழுப்பொறுப்பையும் நீரே ஏற்கவேண்டும்”
 
“ஓர் இடைக்கால ஒழுங்காக, அரசை யுத்தத்தை நிறுத்துமாறு கேட்காது, நீரும் பதிலுக்கு அதேபோல் நடக்க சம்மதித்தால், விமான தாக்குதல், செல் அடித்தல், பீரங்கித்தாக்குதல் முதலியவற்றை நிறுத்தினால் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கலாம். அப்படியானதோர் நிலையில் அரசாங்கத்தை போதிய உணவு வகைகளையும் மருந்துவகைகளையும் மக்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளலாம். உமது பங்கிற்கு நீர் செல் அடிகளையும் பீரங்கித்தாக்குதல்களையும் உடன் நிறுத்தவேண்டும்.”
 
3. 2009.01.11 அன்று என்னால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இருந்து

“விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கைவிடுவார்களேயானால், அவர்கள் அவ்வாறு செய்து அரசுடன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வை காணலாம். அத் தீர்வானது சகல இன மக்களும் சமமாக எதுவித பாகுபாடுமின்றி சகல உரிமைகளையும் அனுபவிக்கக் கூடிய ஓர் தீர்வாக அமைய வேண்டும்.
 
அவ்வாறு செய்யத் தவறின், “கறையான் புற்றெடுக்க பாம்பு குடிகொண்ட” கதைபோல், பழி பாவங்களுக்கு அஞ்சாத கொள்கையில்லாத சிலர் அதிகாரத்தை கைப்பற்ற வழி வகுத்துக் கொடுத்ததாக அமையும். இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தமிழ் மக்கள் எண்ணெய் சட்டியிலிருந்து நெருப்புக்குள் விழ விடாது பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை உண்டு.
 
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்ய வேண்டிய தமது கடமையில் இருந்து தவறி விட்டார்கள் என நான் விசுவாசமாக நம்புவதால் அவர்கள் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
 
என்னைப் பொறுத்தவரையில் எனக்கு எதுவித பதவியிலும் அக்கறையில்லை என்பதையும், எனது முழு அக்கறையும் கடந்த கால்நூற்றாண்டு காலமாக துன்பத்தின் மத்தியில் வாழ்ந்து வரும் எம் மக்களுக்கு பணியாற்றுவது என்பதே”
 
அனைவருக்கும் பூரண சாந்தியும் சமாதனமுமே இன்று நாட்டுக்கு தேவைப்படுவதாகும்;. இதற்கு சிறுபான்மை இன மக்களுக்கு ஏற்கக்கூடிய ஒரு தீர்வு இன்றியமையாததாகும். இந்த நாட்டில் வாழும் மக்கள் சம உரிமையுடன் வாழ விரும்புவதை நடுநிலையாக மனச்சாட்சியுடன் செயல்படும் ஒருவரேனும் எதிர்க்கமாட்டார்கள்.
 
தேசப்பற்றுள்ள பிரஜைகள் எனது கருத்தை ஏற்றக்கொள்ளுவார்கள்;. இந்த நாடு முற்று முழுதாக சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்த போதிலும் பெருமளவு உயிரிழப்புக்கள் மற்றும் கற்பனைக்கெட்டாத பெறுமதியான சொத்துக்களை இழந்தவர்கள் தமிழ் மக்களேயாவார்கள்.
 
நான் உங்களையோ அல்லது வேறு எவரையும் தப்பாக வழிநடத்துபவன் அல்ல என்பதனை அறிவீர்கள். விடுதலைப் புலிகள் சம்பந்தமாக நான் மிகவும் ஒரு நேர்மையான நிலைப்பாட்டை எடுத்தமையால் எழுந்த சிலரது தவறான வழிநடத்தலால் கவரப்பட்ட தமிழ் மக்கள் எனது அரசியல் வாழ்விற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தனர்.
 
எனது ஒரேயோரு கவலை என்ன வெனில் பிரபாகரன் எனது சொல்லைக் கேட்டிருந்தால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி உயிர்களையும் கோடானு கோடி சொத்துக்களையும் அத்துடன் அவரையும் அவரை நம்பிய போராளிகளையும் காப்பாற்றியிருப்பேன். வன்முறையை கைவிட்டு ஐனநாயகப் பாதைக்கு திரும்ப வேண்டுமென்றே விரும்பினேன் அன்றி அவரை அழிக்க வேண்டும் என்று எண்ணயிருக்கவில்லை.
 
நடந்து முடிந்தது பற்றி பேசி இனிப்பயனில்லை. இந்த நாட்டில் சுனாமி எற்பட்ட போது மக்கள் அனைவரும் இனமத பேதம் மறந்து ஒருவரோடு ஒருவர் அனுதாபத்துடன் ஒன்றிணைந்து மிக நெருக்கமாக செயற்பட்டனர். இதன் போது உங்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகத்தோடு ஏற்பட்ட மோதல் மிகவும் துரதிர்ஸ்டவசமானது.
 
இருப்பினம் தற்போது எல்லோரும்; ஒன்றினைந்து அனைவருக்கும் ஏற்புடையதான தீர்வுத்திட்டம் ஒன்றை முன் வைப்பதற்கு ஆண்டவன் மேலுமொரு சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளான். தயவு செய்து பேராசிரியர் சு.மு.று குணசேகரா அவர்களின் தலைமையிலான புத்திஐPவிகள் குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ளவும்.
 
அல்லது அதற்குப்பதிலாக 2004ம் ஆண்டு தொடக்கம் என்னால் வலியுறுத்தப்பட்டு வரும் இந்திய அரசியல் சாசனத்துக்கு ஒத்த ஒரு தீர்வை முன்வையுங்கள். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இதுபற்றி கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளேன். அத்துடன் உங்கள் மந்திரி சபையில் உள்ள சில அமைச்சர்கள் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள் சிலருடனும் ஆலோசித்துள்ளேன்.
 
நீங்கள் கூட ஒரு சந்தர்ப்பத்தில் சமஷ்டி முறையை தவிர்த்து இந்திய முறை பற்றி உங்கள் மகஐர்களிலும் பல்வேறு விமர்சனங்களிலும் எவ்வளவும் கூறுமாறு எனக்கு கூறியதை மறந்திருக்கமாட்டீர்கள். அவ்வாறு கூறியபோது உங்கள் மனநிலை எவ்வாறிருந்தது என்பதனை அறிய விரும்புகின்றேன்.
 
இந்த விடயத்தில் தாமதமற்று செயலாற்றுவீர்களேயானால் நீங்கள் அடையக்கூடிய நன்மைகள் அரைநுற்றாண்டுக்கு மேலாக தீர்க்கப்படாதிருந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சூடு பிடித்திருக்கும் பிரச்சனைகள் தணிவதுடன் வெளிநாட்டு தலையீட்டால்; மக்களுககு ஏற்பட்ட சங்கட நிலையை மாற்றி அவர்களை காப்பாற்றுவதோடு நாட்டுக்கு நிரந்தர சமாதானத்தையும் பெற்று கொடுக்கலாம்
 
அன்புடன் வீ. ஆனந்தசங்கரி தலைவர் தமிழர் விடுதலைக் கூட்டணி

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply