நிரந்தர அமைதிக்காக உழைக்க தலைவர்கள் முன்வரவேண்டும்: யாழ் ஆயர்

இலங்கையில் சிறுபான்மையினருக்கு நடந்தேறும் அநீதிகளைக் கண்டித்து நிரந்தர அமைதிக்காக உழைக்க உள்நாட்டுத் தலைவர்களும், வெளிநாட்டுத் தலைவர்களும் முன்வரவேண்டும் என யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். 
 
நளை பிறக்கவிருக்கும் 2009ஆம் ஆண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள புத்தாண்டுச் செய்தியிலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

முடிவில்லாத துன்பங்களுக்கு மத்தியில் மீண்டும் ஒரு புத்தாண்டு ஆரம்பிக்கும் இவ்வேளையில் அரசு வெற்றிக்களிப்பில் இவ்வாண்டை எதிர்கொள்ள விளையும்போது பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களின் அவலங்களைப் பற்றிக் கவலையில்லாமல் இருக்கமுடியாது” என யாழ் ஆயர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நீதியான நிரந்தரமான தீர்வை உள்நாட்டுத் தலைவர்களும், வெளிநாட்டுத் தலைவர்களும் முன்வைக்கவேண்டுமென எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

முடிவடையும் 2008ஆம் ஆண்டில் நாடு பொருளாதார நெருக்கடிகளையும், இயற்கை அனர்த்தங்கள் போன்ற தடைகளையும் எதிர்கொள்ளவேண்டியிருந்ததாகச் சுட்டிக்காட்டியிருக்கும் யாழ் மறைமாவட்ட ஆயர், வன்னியைக் கைப்பற்ற அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் யுத்தத்தால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொடிய யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளும், பரிசுத்த பாப்பரசர் 16வது பெனடிக்ரும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளபோதும், மோதல் இன்னமும் உக்கிரமடைந்துள்ளது என யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் தனது புத்தாண்டு செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply