தேசிய, சர்வதேச மட்டத்தில் அரசாங்கம் பேச்சுவார்த்தை

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது. இலங்கை தொடர்பில் ஒருதலைப்பட்சமாக முடிவு எடுக்க ஐ.நா. செயலாளருக்கு உரிமை கிடையாது. இந்த அறிக்கை குறித்து தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற விடயங்களை கே.பியினூடாக பகிரங்கப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. தருஸ்மன் அறிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய நிபுணர் குழுவொன்றை நியமித்ததை நாம் ஆரம்பத்திலேயே நிராகரித்தோம். இந்த செயற்பாட்டை ஏற்க முடியாது.

உண்மைக்குப் புறம்பாகவே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பெற்ற வெற்றியைத் தலைகீழாக மாற்றவும் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் செயற்பாட்டையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் குழப்பவுமே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை இறைமையுள்ள நாடாகும்.

ஆனால், திட்டமிட்ட முறையால் இந்த பொய்யான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளிவிவகார அமைச்சினூடாக ஐ.நாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தலைப்பட்சமான இந்த அறிக்கை தொடர்பில் கட்சி இன, மத, பேதமின்றி ஒன்றுபட்டு செயற்படுவது குறித்து பேசி வருகிறோம். பரந்தளவில் இது குறித்து பேச உள்ளோம். சர்வதேச மட்டத்திலும் பல்வேறு தரப்புடனும் பேச்சு நடத்தப்படுகிறது.

புலிகள் இயக்கம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அந்த அமைப்பு ஒழுக்கக் கட்டமைப்பின் கீழ் தேசப்பற்றுடன் செயற்பட்டதாகவும் தருஸ்மன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், உலகில் மிக மோசமான பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன முன்பு தெரிவித்தன. அந்த நாடுகளுடன் தொடர்புடைய நிபுணர் குழுவே இன்று புலிகளை இவ்வாறு உயர்த்திக் கூறியுள்ளது.

ஒழுக்க விழுமியமுள்ள குழு என்பதாலா அவை பிக்குகளை மட்டுமன்றி பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள், ராஜீவ் காந்தி போன்றோரையும் கொலை செய்தது. இரத்தவெறி பிடித்த குரூர குழுவாகவே புலிகள் செயற்பட்டனர்.

தருஸ்மன் அறிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கீகரித்திருப்பது ஆச்சரியப்படும் விடயமல்ல.

இதற்கு முன்னரும் அவர்கள் புலிகள் இயக்கத்தையே பிரதிநிதித்துவப்படுத்தினர். இதிலிருந்து அவர்களை மீட்கவே முயற்சி செய்கிறோம்.

அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்திச் செயற்பாடுகளில் அவர்களை இணைக்க முயற்சி நடக்கிறது.

அவர்களுடன் அரசாங்கம் பேச்சு நடத்தி வருகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்பதை ஏற்க முடியாது.

இந்த அறிக்கை தொடர்பில் ஐ.தே.க. இதுவரை பொறுப்புடனே செயற்பட்டு வருகிறது. இந்த அறிக்கை குறித்து ஆராய பிரட்மன் வீரக்கோன் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். நாட்டை துண்டாடும் சமாதான உடன்படிக்கைக் குழுவிலும் தலைமை தாங்கியிருந்தார். எனவே, ஐ.தே.க, குழு குறித்து கவனமாகவே ஆராயவேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply