ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் எண்ணமில்லை : பீரிஸ்
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையோ கிளர்ச்சிகளையோ நடத்தும் எண்ணம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை நேற்றைய தினம் சந்தித்த அமைச்சர் இவ்வாறு கூறியதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் அமைச்சர் பீரிஸ் மேலும் கூறியுள்ளதாவது நிபுணர் குழுவின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணம் என்ற ரீதியில் இலங்கை அரசாங்கம் கருதவில்லை. இது அரசாங்கங்களினால் அனுமதியளிக்கப்பட்டதல்ல. குறித்த குழுவுக்கு ஆலோசனை வழங்க மட்டுமே முடியும். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அரசாங்கம் நல்லிணக்கம் புனர்வாழ்வு புனரமைப்பு ஆகியவற்றின் ஊடாக தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றது.
மூன்று தசாப்தங்களின் பின்னர் அரசாங்கம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஜனநாயகத்தை நிலைநிறுத்தியுள்ளது. நல்லிணக்கம், புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு உயர் முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல், அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல், முன்னாள் சிறுவர் போராளிகளை விடுவித்தல்,
புனர்வாழ்வளித்தல், வடக்கு கிழக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்தல், வீடுகளை அமைத்தல் என்று பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். அத்துடன் படிப்படியாக தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளோம். ஆனால் இவை எந்தவொரு விடயமும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
மேலும் நிபுணர் குழுவின் அறிக்கை தற்போதைய நிலைமையில் வெளியிடப்பட்டமையானது பாரிய பிரிவினைக்கு வித்திடுவதாக உள்ளது. உண்மையை கண்டறிவதற்கோ அல்லது விசாரணை நடத்துவதற்கோ அதிகாரம் இல்லை என்று குறித்த அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.
உலகின் பல்வேறு நாடுகளில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருக்கின்ற நிலையில் அறிக்கையானது புலிகளுக்கு பக்கச்சார்பாகவே காணப்படுகின்றது. மேலும் இந்த அறிக்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர் பசில் ராஜபக்ஷ மக்களின் அதிகூடிய வாக்குகளை பெற்று வெற்றியீட்டினார். மேலும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாராளுமன்ற சபாநாயகராக உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை உள்ளக செயற்பாட்டை மேற்கொள்ளும் பொருட்டு கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் குறித்த ஆணைக்குழுவை நியமித்துள்ளோம். அந்த ஆணைக்குழு வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் பொது மக்களிடம் சாட்சியங்களை பெற்றுக்கொண்டுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த இடைக்கால பரிந்துரைகள் குறித்து ஆரõய அனைத்து நிறுவன ஆலோசனை குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. தற்போது நாங்கள் ஆணைக்குழுவின் இறுதி பரிந்துரைகளுக்காக காத்திருக்கின்றோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply