4092 முன்னாள் புலி உறுப்பினர்கள் இவ்வாண்டு இறுதிக்குள் விடுதலை
எஞ்சியுள்ள 4092 முன்னாள் புலி உறுப்பினர்களும் இந்த வருட முடிவுக்குள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக வாழ்வில் இணைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. திசானாயக்க கூறினார்.இவர்களில் சுமார் 500 பேர் எதிர்வரும் வெசாக் பண்டிகையின் போது விடுவிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 11,898 முன்னாள் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 6528 பேர் இதுவரையில் புனர் வாழ்வளிக்கப்பட்டு சமூக வாழ்வில் இணைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களுக்கு 9 புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது.
அனைவரையும் ஒன்றாக சமூக வாழ்வில் இணைக்க முடியாது. கட்டம் கட்டமாகவே அவ்வாறு செய்ய முடியும். இவர்களுக்கு புனர்வாழ்வுக்கு மேலதிகமாக தொழிற்பயிற்சி மற்றும் அறிவூட்டல்கள் என்பன வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சரியான முறையில் புனர்வாழ்வு வழங்கப்படாவிடின் அதனால் எதுவித பயனும் ஏற்படாது. இவர்களை நல்ல மனிதர்களாகவே சமூகத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
இதன்படி மணமாகி பிள்ளைகள் உள்ள 400 க்கு அதிகமானவர்கள் அண்மையில் சமூகத்தில் இணைக்கப்பட்டனர். புனர்வாழ்வு பெற்றவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் எமது அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு சுயதொழில் கடன் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இவர்களுக்கு சுயதொழில் பயிற்சி வழங்கப்படுகிறது.
இது தவிர 500 பேருக்கு வீடு கட்டிக் கொள்ள நிதி உதவி வழங்க உள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். புனர்வாழ்வு அளிக்கப்படும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சகல வசதிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்கு தமது உறவினர்களையும் பெற்றோரையும் சந்திக்கவும் அவகாசம் வழங்கப்படுகிறது. அமைச்சர் சந்ரசிறி கஜதீரவின் வழிகாட்டலின் கீழ் புனர்வாழ்வு அளிக்கும் செயற்பாடு வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply