ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் நாளை எழுச்சிகரமான மேதினம்
வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் சகல பகுதிகளிலிருந்தும் பல இலட்சக் கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மே தின விழா நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ளது. கொழும்பு மாநகர சபை முன்றலில் மிகவும் பிரமாண்டமான வகையில் 16 அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பொது அமைப்புகள் இணைந்து இம்மேதின விழாவை நடத்தவுள்ளன.
கொழும்பு கெம்பல் பார்க், ராஜகிரிய, நாரஹேன்பிட்டி, மாளிகாகந்த ஆகிய பகுதிகளிலிருந்து பல கட்சிகளினது மே தின ஊர்வலங்கள் நண்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாவதுடன் அவ்வூர்வலங்கள் கொழும்பு நகர மண்டபத்தை அடைந்ததும் பிற்பகல் 4 மணிக்கு மே தின விழா ஆரம்பமாகும்.
கடந்த சுமார் 25 வருடங்களுக்குப் பின்னர் நாட்டின் சகல பகுதிகளிலிருந்தும் மக்கள் சுதந்திரமாகக் கலந்துகொள்ளும் மே தினம் என்பதால் இம்முறை மே தினம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகிறது.
மே தினக் கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த முடியாத சூழல் கடந்த காலங்களில் நாட்டில் நிலவியது. அத்தகைய சூழலை மாற்றி நாட்டில் அமைதியை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அரசாங் கத்துக்கும் தொழிலாளர் வர்க்கம் நன்றி செலுத்தும் வகையில் நாளை கொழும்பில் ஒன்று திரளவுள்ளது.
தொழிலாளர் வர்க்கத்திற்கு அதிக நன்மைகளையும் சலுகைகளையும் வழங்கிய அரசாங்கம் என்ற வகையில், உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டுமன்றி சர்வதேச சூழ்ச்சிகளிலிருந்து அரசாங்கத்தையும் ஜனாதிபதி யையும் பாதுகாக்கும் வகையில் அரசாங்கத்தின் பலத்தை வெளிக்காட்டும் வகையிலும் இம்முறை மேதின விழா அமையும் என தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. இம் மாநாட்டில் தொழிற்சங்கத் தலைவர்களான லெஸ்லி தேவேந்திர, டபிள்யூ. பி. பியதாச ஆகியோர் தலைமையில் சகல தொழிற்சங்கங்களின் தலைவர்களும் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தின ஊர்வலம் பொரளை கெம்பல் பார்க்கிலிருந்து நண்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகும். இ. தொ. கா., ஈ. பி. டி. பி., ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பல கட்சிகள் இவ்வூர்வலத்தில் இணைந்து கொள்ளவுள்ளன.
மக்கள் கட்சி உட்பட ஐந்து கட்சிகள் பங்கேற்கும் மே தின ஊர்வலம் ராஜகிரியவிலிருந்து ஆரம்பமாகவுள்ளது. அதேபோன்று மக்கள் ஐக்கிய முன்னணியின் ஊர்வலம் நாரஹேன் பிட்டியிலிருந்தும், தேசிய சுதந்திர முன்னணியின் மே தின ஊர்வலம் மாளிகாகந்தையிலிருந்தும் பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 4 மணிக்கு நகர மண்டபத்தை வந்தடையும்.
இம்முறை மே தினம் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கும் மேதினமாக அமைந்துள்ளது. தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்து அதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மலையகக் கட்சிகள் பல நாளைய தினம் முற்பகலில் தமது மே தினக் கொண்டாட்டங்களை நடத்துவதால் பிற்பகல் கொழும்பில் நடைபெறும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தின விழாவில் அக்கட்சிகள் பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply