அதிகாரத்தை பாதுகாக்க எவரிடமும் மண்டியிடேன் வரலாற்று சிறப்புமிக்க மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி
பதவி மற்றும் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்காக எந்த சக்திக்கும் முன்னால் மண்டியிடுவதற்கு நாம் தயாரில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று கொழும்பில் தெரிவித்தார். நாட்டில் சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் கட்டியெழுப்பி துரித அபிவிருத்தியை நோக்கி செல்லும் எமது பயணத்தைத் தடுப்பதற்கு நாம் எவருக்கும் இடமளியோம் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார். புலிகளின் பிடியிலிருந்து அப்பாவி மக்களையும் சயனைட் வில்லைகளிலிருந்து இளம் பராயத்தினரையும் மீட்டெடுத்தது நாம் செய்த குற்றமா? என்றும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றொழித்ததோடு மாத்திரமல்லாமல் எமது படையினர் மீதும் மிகக் குரூரமான தாக்குதல்களை மேற்கொண்டு வந்த போதிலும் பிரபாகரன் உள்ளிட்ட புலிப் பயங்கரவாதிகளுக்கு உணவு மற்றும் மருந்து வகைகளை நாம் குறைவின்றி வழங்கியது தவறா என்றும் ஜனாதிபதி வினவினார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பில் ஈடுபட்டிருப்போர், சுயதொழிலாளர்கள் மற்றும் தனியார் துறையினர் ஆகியோரின் நலன்களுக்கான ஓய்வூதியத் திட்ட யோசனையைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்தச் சக்திக்கும் இடமளியேன் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஐக்கிய மே தினக் கூட்டம் கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
‘பிறந்த மண்ணுக்கான வியர்வைத் துளியானது தேசத்தைப் பாதுகாக்கும் மக்கள் அரணாகும்’ என்ற தொனிப்பொருளிலான இம் மே தினக் கூட்டத்தில் இலட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-
நாட்டில் என்னதான் கஷ்டங்கள், துன்பங்கள் வந்தாலும் தொழிலாளர்களின் உரிமைகளும், வசதிகளும் பாதிக்கப்படுவதற்கு நாம் ஒரு போதும் இடமளியோம். வடக்கில் மனிதாபிமான நடவடிக்கை இடம்பெற்ற போதும்கூட வட பகுதியில் கடமையாற்றும் அரச ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளத்தை அனுப்பி வைத்தோம். அது மாத்திரமல்லாமல் ஓய்வூதியக் கொடுப்பனவையும் கூட உரிய நேர காலத்தில் வழங்கினோம்.
பிரபாகரன் எமது அப்பாவி மக்கள் மீதும், படையினர் மீதும் குரூரமான தாக்குதல்களை மேற்கொண்டு வந்த போதிலும் அவரது தந்தை எதுவித பிரச்சினையுமின்றி தொடர்ந்தும் ஓய்வூதியம் பெற்று வந்தார்.
பிரபாகரனும், அவரது குழுவினரும் மிக மோசமான பயங்கரவாத செயல்களை மேற்கொண்டு வந்த போதிலும் அவர்களுக்கு நாம் தொடர்ந்தும் உணவு வழங்கினோம். அவர்களை நாம் பட்டினி போடவில்லை. உலகில் எங்குமே நடக்காத விடயம் இது. அவர்கள் ஆயிரக் கணக்கான மக்களை மனிதக் கேடயங்களாகப் பிடித்து வைத்துக்கொண்டு எமது படையினர் மீது தாக்குதல்களை நடத்தி வந்தார்கள். அப்படி இருந்தும் எமது படையினர் மனிதாபிமான அடிப்படையில் அவர்களது பிடியில் சிக்குண்டிருந்த மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுத்தார்கள். அவர்களுக்குப் படையினர் தமது உணவை வழங்கினார்கள்.
அவர்களின் பிடியில் மூன்று இலட்சம் அப்பாவிகள் சிக்குண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தேவையான உணவை குறைவின்றி அனுப்பினோம். மூன்று இலட்சம் பேருக்கு உணவு அனுப்பும்படி ஐ. நா. நிறுவனங்கள் கூறிய போதிலும் நாம் மூன்றரை இலட்சம் பேருக்குத் தேவையான உணவை அனுப்பினோம். இது நாம் செய்த மனித உரிமை மீறலா?
அன்று யுத்தத்திற்கு குழந்தைகளைப் பலவந்தமாகப் பிடித்துச் சென்றார்கள். இன்று அப்படியான நிலமை இல்லை. இப்போது அப்பகுதி குழந்தைகள் சுதந்திரமாக கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றார்கள். இப்படியான நிலைமையை நாம் ஏற்படுத்தியது தவறா?
அன்று சயனைட் வில்லைகளை அணிந்து கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட குழந்தைதகள் இன்று விஞ்ஞான துறையில் கல்வி கற்கின்றார்கள். டாக்டர்களாக அவர்கள் உருவாகின்றார்கள். இதுவா நாம் செய்த மனித உரிமை மீறல் தற்கொலை தாக்குதல் என்ற பெயரில் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை குறித்து அறிக்கை எழுதுபவர்கள் வாழ்க்கையில் ஒரு போதுமே வடக்கு கிழக்கைப் பார்த்திராதவர்கள். ஆனால் இங்கு மனித உரிமை, ஜனநாயகம் இல்லை எனக் கூறுகிறார்கள். தயவு செய்து டொலர்களுக்கு அடிமையாகாதீர்கள்.
துண்டாடப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு பிரதேசம் இப்போது ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. ஆனையிறவில் மாத்திரமல்ல சங்குபிட்டி ஊடாகவும் வடக்கு தென்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பாரியளவு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அப்பகுதிகளிலும் மக்கள் அச்சம், பீதியின்றி வாழுகின்றார்கள். இவற்றையெல்லாம் அறிக்கை எழுதுபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். டொலர்களுக்கு அடிமையாகி இங்கு மனித உரிமை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறாதீர்கள்.
இந்த நாட்டில் பல சந்தர்ப்பங்களில் இரத்த ஆறு ஓடியுள்ளது. 89 ஆம் ஆண்டில் தென்பகுதியில் ஓடியது. அதேபோல் மூன்று தசாப்தங்கள் வடக்கில் ஓடியது எமது மக்களினதும் குழந்தைகளினதும் இரத்தம் தான் இவ்வாறு ஓடியது. இதனால் இலட்சக் கணக்கான மக்களை நாம் இழந்துள்ளோம். வரலாறு நெடுகிலும் இரத்த ஆறு ஒட இடமளிக்க முடியாது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எதிர்காலத்தில் இப்படியான நிலைமை ஏற்பட இடமளிக்க முடியாது.
இன்றையப் போன்ற ஒரு தொழிலாளர் தினத்தில் தான் அரச தலைவர் ஒருவரைப் படுகொலை செய்தார்கள். தொழிலாளர்களைப் படுகொலை செய்தார்கள் இவற்றை மறந்து விடாதீர்கள். இங்கு ஊர்வலம் வந்தவர்கள் தொழிலாளர்களே. இன்று எமது மக்கள் இரத்தம் சிந்துவதில்லை. மாறாக அவர்கள் இப்போது வியர்வை சிந்துகிறார்கள். ஏனென்றால் இந்நாட்டைக் கட்டியெழுப்பவே.
டொலர்களுக்கு அடிமையாகி மனித உரிமை மீறப்படுவதாகப் பொய் கூறி நாட்டை சீரழிக்காதீர்கள். எவரென்றாலும் இப்போது இங்கு உருவாகியுள்ள நிலைமையைப் போக்குவதற்கு முயற்சிப்பாராயின் அதனால் பாதிக்கப்படுவது இந்நாட்டு மக்களாவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதனால் அழிவுறுவது முழு நாட்டிலும் நாம் கட்டியெழுப்பிய பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களே. ஆகவே தேசத் துரோகியாகாதீர்கள். இந்நாட்டின் சமாதானத்தைச் சீர்குலைக்காதீர்கள்.
இந்நாட்டைக் கட்டியெழுப்பும் போது பலவிதமான பிரச்சினைகள் வந்தன. அத்தோடு பல்வேறு விதமான சக்திகளும் வந்தன. எந்தச் சக்தி வந்தாலும் அதிகாரத்தையும், பதவியையும் பாதுகாப்பதற்காக மண்டியிட்டு தலைவணங்க நாம் தயாரில்லை என்பதை தெளிவாக கூறுகின்றேன்.
உயிரை அர்ப்பணித்து இந்த சுதந்திரத்தை நாம் பெற்றுள்ளோம். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கும் இச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்.
இந்நாட்டில் வாழும் சகல மதத்தவரும் தமது மத வழிபாடுகளில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கு பெற்றிருக்கும் உரிமையை சீரழிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது.
மேலும் தனியார் துறையின், வெளி நாடுகளில் பணிபுரிவோர், சுயதொழில்களில் ஈடுபடுவோர் போன்றோரை கவனத்தில் கொண்டு அவர்களைப்பாதுகாப்பதற்காக ஓய்வூதியத் திட்ட யோசனையை முன்வைத்துள்ளோம். இதனை உங்களது நலன்களைக் கருத்தில் கொண்டே முன்வைத்திருக்கின்றோம். இருப்பினும், பல்வேறு சக்திகள் இந்த யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள் என்றாலும் நாம் தாமதப்படுத்த மாட்டோம். மக்களுடனும் தொழிற்சங்கத் தலைவர்களுடனும் கலந்துரையாடி இந்த யோசனையைச் செயற்படுத்துவதற்கு நாம் தயாராகவுள்ளோம். நாம் தன்னிச்சையாகச் செயற்படுபவர்கள் அல்லர். நாம் எப்போதும் மக்களின் குரல்களுக்கு செவிசாய்ப்பவர்கள். என்றாலும் இந்த ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்தி விடுவதற்கு எந்தச் சக்திக்கும் இடமளியோம் என்பதைத் தெளிவாகச் சொல்லிவைக்கின்றேன்.
நாம் எப்போதும் தொழிலாளர்களின் நலன்களுக்காகச் செயற்படுபவர்கள் அவர்களின் நலன்களை அடிப்படையாக வைத்தே முடிவுகளை எடுப்பவர்கள். என்றாலும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். பண்டாரநாயக்காவின் காலத்தில் ரி. பி. இலங்கரட்ன ஊழியர் சேமலாப நிதிய, யோசனையைக் கொண்டு வந்த போதும் இப்படியானவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது புதுமையான விடயமல்ல.
ஓய்வூதியத் திட்டம் பெற்றுக் கொடுக்கப்படுகின்ற போதிலும் ஊழியர் சேமலாப நிதியம் ஒருபோதும் இல்லாமற் செய்யப்படமாட்டாது. இதனைத் தெளிவாகக் கூறிவைக்க விரும்புகின்றேன்.
இந்த மே தினக் கூட்டத்திற்கு வடக்கு, கிழக்கு உட்பட முழு நாட்டிலிருந்தும் இலட்சக் கணக்கான மக்கள் கூடியிருப்பது அவர்கள் நாட்டின் மீது கொண்டிருக்கும் பற்றையும், அன்பையும், உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளது. இன்று எல்லா நிறங்களுமே தேசியக் கொடியின் கீழ் ஒன்றுபட்டுள்ளன. நாம் நாட்டு மக்களை ஒன்றுபடுத்தியுள்ளோம் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ளுகின்றோம் என்றார். இந்நிகழ்வில் மூன்று மே தின யோசனைகளும் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதமர் டி. எம். ஜயரட்ன, அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ரிஷாட் பதியுத்தீன், ஏ. எல். எம். அதாவுல்லா, மைத்திரிபால சிறிசேன, டளஸ் அழகப்பெரும, நிமல் சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச, பாட்டலி சம்பிக்க ரணவக்க, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, பிரதியமைச்சர் ஏ. ஆர். எம். ஏ. காதர், எம்.பிக்களான பி. எச். பியசேன, ஏ. எச். எம். அஸ்வர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply