கனிமொழி- காவல் உத்தரவு பற்றி 14ம் தேதி முடிவு

இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரருமான கனிமொழி உள்ளிட்டோரை காவலில் வைக்க வேண்டும் என்ற மத்தியப் புலனாய்வுத் துறையின் கோரிக்கை குறித்து, சிறப்பு நீதிமன்றம் வரும் 14-ம் தேதி முடிவெடுக்க உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குநர் ஷரத்குமார் ஆகியோர் வெள்ளிக்கிழமை மத்தியப் புலனாய்வுத் துறையின் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்பு ஆஜரானார்கள்.

கனிமொழியை காவலில் வைக்கக் கூடாது என்று அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி வாதிட்டார். அவர் சட்டத்தை மதித்து நடக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் என்றும், அவர் பெண் என்றும் குறிப்பிட்ட ராம்ஜெத்மலானி, கலைஞர் தொலைக்காட்சி பணப் பரிவர்த்தனையில் கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் வாதிட்டார்.

ஆ. ராசா தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது, அலைக்கற்றை ஒதுக்கீடு பெறக் காட்டிய சலுகைக்கு கைமாறாக, டிபி ரியாலிடி நிறுவனத்தின் ஆஸிப் பால்வா மற்றும் ராஜீவ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் கரிம் மொரானி ஆகியோர் மூலமாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் கைமாறியுள்ளதாகவும், அது லஞ்சப் பணம் என்றும் அதைப் பெற்றது கனிமொழி மற்றும் ஷரத்குமார் என்றும் லலித் வாதிட்டார்.

கனிமொழிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் நேரடிக் கட்டுப்பாடு எதுவும் இல்லை என்ற ராம்ஜெத்மலானியின் வாதத்தை ஏற்க முடியாது என்றும், திரை மறைவில் இருந்து அத்தனை இயக்கங்களையும் மேற்கொண்டவர் கனிமொழி தான் என்றும், இடத்தை நிரப்புவதற்காகத்தான் தயாளு அம்மாள் பங்குதாரராக பெயரளவில் சேர்க்கப்பட்டார் என்றும் சிபிஐ வழக்கறிஞர் வாதிட்டார்.

200 கோடி ரூபாய்க்கு மேல் பணப் பரிவர்த்தனை இருந்தும் ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும், அவ்வளவு பெரிய தொகை கொடுக்கப்பட்டதற்கு பாதுகாப்பு ஒப்பந்தம் ஏதும் செய்யப்படவில்லை என்பதை நம்ப முடியவில்லை என்றும் சிபிஐ வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பரிவர்த்தனை நியாயமானது இல்லை என்று கூறிய அவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள மற்றவர்களைப் போல, கனிமொழி, ஷரத்குமாரையும் வழக்கு விசாரணை முடிவடையும் வரை காவலில் வைக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர்களுக்கு எந்த சலுகையும் காட்டக் கூடாது என்றும் சிபிஐ வழக்கறிஞர் வாதிட்டார்.

இதையடுத்து, விசாரணை முடிவடைந்து அதுதொடர்பான உத்தரவு வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply