போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுதந்திரமான விசாரணை வேண்டும் : பிரித்தானியா

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான,நம்பகமான விசாரணை நடத்தப்படுவதையே பிரித்தானியா விரும்புவதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரும், பிரதி வெளிவிவகார அமைச்சரும் தெரிவித்துள்ளனர். பிரித்தானிய பாராளுமன்றத்தின் பொதுச்சபையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதை ஐ.நா.வின் அறிக்கை உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா.வுக்கு பரிந்துரை செய்ய பிரித்தானிய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது. இலங்கை பொதுநலவாய நாடுகள் சங்கத்தின் உறுப்பு நாடாக உள்ள நிலையில், போர்க்குற்றங்களுக்குத் தண்டனை வழங்கப்படுவதை ஆதரிக்கிறதா? என்று கடந்த செவ்வாய்க்கிழமை பிரித்தானிய பாராளுமன்றத்தின் பொதுச்சபையில் லிபரல் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் சைமன் ஹியூஜெஸ் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்கி, இது ஒரு முக்கியமான விடயம். இந்த அறிக்கையைப் பெறுவதற்கு ஐ.நா. பொதுச் செயலருக்கு பிரித்தானிய அரசாங்கம் பலமான ஆதரவை வழங்கியது இந்த அறிக்கையை நாம் கவனமாக ஆராய்ந்து வருகிறோம்.

அதேவேளை, இலங்கை அரசாங்கம் இதற்கு என்ன பதில் கூறப்போகிறது என்றும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது பற்றி அவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை அது தெளிவுபடுத்தும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அதேவேளை, கடந்த வெள்ளியன்று பொதுச்சபையில் பிரித்தானியாவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தகவல் வெளியிடுகையில்,

இலங்கை அரசாங்கம் நியமித்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாம் மே 15 ஆம் திகதி எதிர்பார்க்கிறோம். போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சுதந்திரமான நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை நடத்தப்படுவதையே நாம் விரும்புகிறோம்.

நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான எமது கரிசனைகளையும் நாம் வெளிப்படுத்தியுள்ளோம். அதேவேளை நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் என்ன கூறப் போகிறது என்பதை அனுமானிக்க முடியாது.

தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாம் இலங்கை அரசைக் கேட்டுக் கொள்கிறோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply