பயங்கரவாதிகள் பலர் பாகிஸ்தானில் உள்ளனர்: ஒபாமா
“ஒசாமா பின்லாடனுக்கு உதவி செய்தவர்கள் பாகிஸ்தான் அரசுக்குள் இருக்கின்றனரா என்பது பற்றி தெரியாவிட்டாலும், இதுகுறித்து அமெரிக்காவும், பாகிஸ்தானும் விசாரணை மேற்கொள்ளும். பாகிஸ்தானில் கொல்லப்பட வேண்டிய பயங்கரவாதிகள் மேலும் பலர் உள்ளனர்’ என்று, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவர் அபோதாபாத்தில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருந்தது பற்றி, அமெரிக்கா தொடர்ந்து சந்தேகங்களை எழுப்பி வருகிறது.
இதுகுறித்து நேற்று பேட்டியளித்த அதிபர் ஒபாமா கூறியதாவது: ஒசாமா பாகிஸ்தானில் தங்கியிருக்க உதவியவர்கள், அந்நாட்டுக்குள் இருக்கின்றனரா அல்லது வெளியில் உள்ளனரா என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை.ஆனால், இதுகுறித்து இருதரப்பு அரசுகளும் விசாரிக்க வேண்டியுள்ளது. பாகிஸ்தானில் ஒசாமாவுக்கு சிலர் உதவி செய்துள்ளனர். அவர்கள் யார் என்று தெரியவில்லை.
ஒசாமாவுக்கு உதவியது யார் என்பதை கண்டுபிடிப்பதிலும், விசாரிப்பதிலும் தாங்களும் ஆர்வமாக இருப்பதாக பாக், அரசு கூறியுள்ளது. இதற்கு சிலகாலம் ஆகலாம். நான்கைந்து நாட்களுக்குள் விடை கிடைத்து விடாது. இரட்டை கோபுர தகர்ப்புக்குப் பின், பயங்கரவாத எதிர்ப்பில் எங்களுடன் இணைந்து பாக். செயல்பட்டு வருகிறது.
இடையில், இருதரப்புக்கும் சில கருத்து வேறுபாடுகள் வந்தன. அவையனைத்தும் உண்மை. இன்றும் தொடர்கின்றன.அதே நேரம், பாகிஸ்தான் மண்ணில் உள்ள சில பயங்கரவாதிகளைக் கொல்ல வேண்டியிருக்கிறது. இதற்கு பாக்., ஒத்துழைப்பும் வேண்டியுள்ளது. பாகிஸ்தானில் அமெரிக்காவுக்கு எதிரான ஆழமான மனநிலை இருக்கிறது. அதனால், அங்கு அமெரிக்கா தீவிரமாக செயல்படுவது சிறிது கடினம் தான்.இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply