அமெரிக்காவின் தாக்குதலை கண்டித்து பாக் தீர்மானம்

அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கை பற்றி பாகிஸ்தானிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒருசேர நடத்தியிருந்த விவாதத்தில், இது சம்பந்தமாக சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தவிர பாகிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்டுவரும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை அது நிறுத்தாதவரையில் ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளுக்கு பொருட்களை கொண்டும் வாகனங்களை பாகிஸ்தான் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றையும் அவர்கள் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளனர்.

பாகிஸ்தானின் வடமேற்கில் நடத்தப்பட்ட ஒரு வெடி குண்டுத் தாக்குதலில் நேற்று வெள்ளியன்று எண்பது பேர் கொல்லப்பட்டிருந்தனர். சார்சத்தா மாவட்டத்தில் எல்லைக்காவல் படை பயிற்சி மையத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் வேறு 120 பேர் வரை காயமும் அடைந்திருந்தனர்.

பின் லாடன் கொலைக்கு பழிக்குப் பழிவாங்குவதற்காக இத்தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தானிய தாலிபான் அமைப்பினர் உரிமை கோரியிருந்தனர். மேலும் தாக்குதல்கள் வரும் என்று அவர்கள் எச்சரித்தும் இருந்தனர்.

பாகிஸ்தானிய நாடாளுமன்றம் கொண்டுவந்துள்ள தீர்மானம் எதுவுமே அந்நாட்டில் அல்கைதா தலைவர் தங்கியிருந்த விவகாரம் பற்றி எதுவும் பேசவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது. மாறாக அமெரிக்காவுடன் பாகிஸ்தான் கொண்டுள்ள உறவு பற்றியே அவை பேசியிருக்கின்றன.

பாகிஸ்தான் அரசுக்குத் தெரியாமலேயே அதன் மண்ணில் அமெரிக்கா இந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருந்ததற்கு எதிரான வலிமையான கண்டனத்தை இத்தீர்மானங்கள் வெளிப்படுத்துகின்றன.

பாகிஸ்தானுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கான ஒரு பிரச்சாரம் இதுவென்று நாடாளுமன்றம் தெரிவித்திருந்தது.

அமெரிக்க நடவடிக்கை சாத்தியமானதற்காக பாகிஸ்தானிய பாதுகாப்பு படைகளை அந்நாட்டின் அரசாங்கம் வெளிப்படையாக விமர்சிப்பதாக இல்லாமல், அப்படைகளின் மீது முழுமையான நம்பிக்கையையும் ஆதரவையும் வெளிப்படுத்துவதாக ஒரு தீர்மானம் அமைந்திருந்தது.

ஆனால் பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவர் ஜெனரல் பாஷா, நாடாளுமன்றத்தில் தோன்றி விளக்கம் அளித்த சமயத்தில் அவரிடம் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அவரும் தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாகவும், ஆனாலும் அவரது ராஜினாமாவை பிரதமர் ஏற்க மறுத்துவிட்டார் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்ததுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply