துக்க நாளான இன்று அரசியல் தன்னாட்சி உரிமையை வென்றெடுக்க சபதம் ஏற்போம்: சுரேஷ்

தேசிய துக்க நாளாகிய இன்று முள்ளிவாய்க்கால் வரலாற்றுப் பெருந்துயரை நெஞ்சில் இருத்தி இலங்கைத் தீவில் தமிழர்கள் இழந்து போன அரசியல் தன்னாட்சி உரிமையை வென்றெடுக்க சபதம் ஏற்போம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி. யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் மீது முள்ளிவாய்க்கால், காலத்தால் ஆற்ற முடியாத பெருந்துயரமாகப் பதிந்து விட்டிருக்கிறது.இங்குதான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற முற்றுகைப் போரில் எமது மக்கள் பால் வயது வேறுபாடின்றி, வகை தொகையின்றி ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டார்கள். அங்கவீனமாக்கப்பட்டார்கள். உணவும் மருந்தும் இன்றிப் பரிதவிக்கவிடப்பட்டார்கள். அவலங்களைக் கண்ணுற்று சித்த சுவாதீனமாக்கப்பட்டார்கள். எஞ்சியோர் முள் வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டார்கள். மொத்தத்தில் இங்குதான் மூன்று தசாப்த கால தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் உயிர் நாடி வெட்டி எறியப்பட்டது.

இந்த வரலாற்றுப் பெருந்துயரை நினைவு கொள்ளும் முகமாக தமிழ் கூறும் நல்லுலகு மே 18 ஆம் திகதியை தேசிய துக்க நாளாகக் கடைப்பிடித்து வருகின்றது.

சாத்வீகமான முறையில் போராடிய ஈழத் தமிழ்ச் சமூகம் வரலாற்றின் நிர்ப்பந்தம் காரணமாகவே ஆயுதங்களைக் கையிலெடுக்க நேர்ந்தது. இலங்கை ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாள் முதல் சிங்கள ஆட்சியாளர்களினால் தமிழர்கள் உரிமை மறுக்கப்பட்ட இரண்டாம் தரப் பிரஜைகளாகவே நடத்தப்பட்டனர். தமிழ் தலைமைகள் தமிழர்களது உரிமைகளை வென்றெடுக்கக் காலத்துக்கு காலம் சிங்கள பேரினவாத அரசுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது நயவஞ்சகத்தனமாக ஏமாற்றப்பட்டனர்.

செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் கூடக் கிழித்தெறிப்பட்டன. சாத்வீகமான முறையில் போராடத் தலைப்பட்ட போது ஆயுத முனையில் அடக்கி ஒடுக்கப்பட்டனர். இதன் விளைவாகவே வரலாற்றின் தவிர்க்க முடியாத பக்கமாக தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தத் தலைப்பட்டனர்.

முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் ஒடுக்கப்பட்டு இரண்டு வருடங்களைக் கடந்துவிட்ட போதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நிவாரணங்கள் உரிய முறையில் இன்னமும் எட்டப்படவுமில்லை. சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல் இன்னமும் முகாம்களில் மக்கள் வாடிக் கொண்டிருக்கிறார்கள். சொந்த இடத்திற்கு திரும்பிய மக்கள் கூட தகரக் கொட்டகைகளின் கீழ் அரை வயிறும் கால் வயிறுமாக வாழ் நாளைக் கடத்திக் கொண்டிருக்கின்றனர். போரின் போது காணாமல் போனவர்களையும் அதன் பின்பு சரணடைந்து காணாமல் போனவர்களையும் தேடி அவர்களது உறவுகள் கண்ணீரும் கம்பலையுமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

தேசிய துக்க நாளாகிய இன்று முள்ளிவாய்க்கால் வரலாற்றுப் பெருந்துயரை நெஞ்சில் இருத்தி, இலங்கைத் தீவில் தமிழர்கள் இழந்து போன தமது அரசியல் தன்னாட்சி உரிமையை வென்றெடுக்க சபதம் ஏற்போம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply