இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாடு உலகில் வலுக்கிறது

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிரான போக்கு உலக அரங்கில் அதிகரித்து வருகிறது. அந்த அறிக்கையை இலங்கை அரசு முற்றாக நிராகரித்துள்ள போதும், அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை அரசு நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்ற கருத்தே மேற்குலக நாடுகளாலும் ஏனைய பெரும்பாலான நாடுகளாலும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதுவரையில் சீனா, ரஷ்யா, மாலைதீவு ஆகிய நாடுகள் மட்டுமே நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தேவையின்றித் தலையிட்டுக் குழப்பக்கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டது ஐ.நா. அறிக்கையே கிடையாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. அறிக்கை ஏன் இப்போது விடப்பட்டது என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று மாலைதீவு ஜனாதிபதி தெரிவித்தார்.

உலகெங்கும் 35க்கும் மேற்பட்ட நாடுகள் நிபுணர் குழு அறிக்கையை ஆதரித்துள்ளதுடன் இலங்கை அதனடிப்படையில் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன.

நிபுணர் குழுவின் அறிக்கை ஒரு வரப்பிரசாதம் என்று தெரிவித்துள்ளது பிரான்ஸ். இலங்கை அதிகாரிகள் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து செயலாற்ற முன்வரவேண்டும் என்றும் அது கேட்டுள்ளது.
 
அறிக்கை தொடர்பில் ஐ.நாவுடன் இணைந்து பணியாற்றுமாறு ஜப்பான் வலியுறுத்தி உள்ளது. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசு சரிவரச் செயற்படுத்தாவிட்டால் அனைத்துலக விசாரணை அவசியம் என்கிறது நியூஸிலாந்து. போர்க் குற்றங்கள் குறித்து இலங்கை விசாரித்தே ஆகவேண்டும் என்கிறது நோர்வே.

நிபுணர் குழு அறிக்கையைச் சாதகமான முறையில் பரிசீலிக்கும்படி இலங்கையை ஊக்குவிப்பதாகக் கூறுகிறது பிரிட்டன்.

அமெரிக்காவோ, இலங்கை தனது பொறுப்பை நிறைவேற்றுகிறதா என்பதையே முதலில் கவனிக்கிறோம் என்கிறது. சுவிற்சர்லாந்து நிபுணர் குழுவின் அறிக்கையை வரவேற்றுள்ளது.

27 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐரோப்பிய நாடாளுமன்றம், நிபுணர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கையைக் கோரி உள்ளது.
மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க வேண்டும் என்று இறுதியில் இந்தியாவும் வலியுறுத்தி உள்ளது. எனினும் இந்தியாவுக்குள்ளே, பிரதான கட்சிகளான பாரதீய ஜனதாக் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கட்சி, அதிமுக, திமுக, விடுலைச் சிறுத்தைகள், மதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி போன்றனவும் இலங்கைக்கு எதிரான கருத்துக்களையே கொண்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply