மனித உரிமை நிலைமைகள் முன்னேற்றப்பட வேண்டும் : அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக்
விடுதலைப் புலிகள் இலங்கையில் தடைசெய்யப்பட்டால் அது சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பை இராணுவ ரீதியில் முழுமையாகத் தோற்கடிப்பது சாத்தியமற்றது என கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் செவ்வியில் குறிப்பிட்டிருக்கும் அமெரிக்கத் தூதுவர், பேச்சுவார்த்தை நடத்துவதா இல்லையா என்பதை இலங்கை அரசாங்கமே தீர்மானிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.
அதேநேரம், தீர்வொன்று குறித்து அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம் எனச் சுட்டிக்காட்டிய பிளேக், இதன் மூலம் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
இராணுவ ரீதியான தீர்வில் பெற்றிபெற முடியாது என நான் கருதுகின்றேன். அரசியல் தீர்வுத் திட்டமொன்று மேசையில் இல்லாவிட்டால் நாட்டுக்குள்ளும், நாட்டுக்கு வெளியிலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தொடர்ந்துகொண்டே இருக்கும். அரசியல் தீர்வொன்றுக்கு அரசாங்கம் செல்லுமாயின் அரசு மீது நம்பிக்கைகொண்டு தமிழ் மக்களும், முஸ்லிம்களும் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவை இடைநிறுத்திக்கொண்டு, அரசாங்கத்துக்கு உதவுவார்கள் என அமெரிக்கத் தூதுவர் தனது செவ்வியில் குறிப்பிட்டார்.
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவே தான் கருதுவதாக பிளேக் கூறினார். கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக 90 வீத இணக்கம் காணப்பட்டிருப்பதாக அவர்கள் கூறிவருகின்றனர். எஞ்சியுள்ள 10 வீதத்தை அவர்கள் அண்மித்ததாகத் தெரியவில்லை. எஞ்சிய 10 வீதத்தை எட்டுவதே மிகவும் கடினமானது. எனவே, எனது அரசியல் நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தீர்வொன்றை ஏற்படுத்துவார்கள் என நினைக்கின்றேன் என்றார் அவர்.
தென்னிலங்கையில் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்கிலேயே சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு ஆரம்பிக்கப்பட்டது எனச் சுட்டிக்காட்டிய அமெரிக்கத் தூதுவர், தற்பொழுது மோதல்கள் ஆரம்பிக்கப்பட்டு, விடுதலைப் புலிகள் பலவீனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவது முக்கியமானது எனக் கூறினார்.
விடுதலைப் புலிகளைக் காட்டிலும் தமிழ்க் கட்சிகள், மக்களைப் பற்றிச் சிந்திப்பவர்கள் என்பதால் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் தமிழ் கட்சிகளும் உள்வாங்கப்படவேண்டும். விடுதலைப் புலிகளுக்கு தொடர்ந்தும் நிதியுதவிகளை வழங்கிவரும் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களும் இந்த நடவடிக்கைகளில் உள்ளடக்கப்பட்டால், அவர்களின் நிலைப்பாட்டையும் தெரிந்துகொள்ளமுடியும்” என அந்த ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் குறிப்பிட்டார்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் அதேசமயம், மனித உரிமை சூழ்நிலையும் முன்னேற்றப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய பிளேக், தான் கொழும்புக்கு வரும்போது அதிகரித்திருந்த கடத்தல்கள், காணாமல்போதல் சம்பவங்கள் தற்பொழுது குறைந்திருப்பதாகக் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply