இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் சர்வதேச சமூகம் செயல் முனைப்பற்றிருந்தமைக்கு காரணம் என்ன?
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் அனைத்துலக சமூகம் செயல் முனைப்பு அற்ற நிலையில் இருந்ததென நோர்வே தமிழ் கற்கை மையத்தின் கருத்தரங்கில் நோர்வேயின் வெளியுறவு அரசியல் ஆய்வு மையத்தின் தலைவரும் முன்னாள் நோர்வே பிரதி வெளியுறவுத் துறை அமைச்சரும் ஐ.நா. பிரதிநிதியுமான ஜான் இஜ்லண்ட் தெரிவித்துள்ளார்.ஆசியாவின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவுகளையும் உதவிகளையும் வழங்கியமை மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்துலக போரின் விளைவாக விடுதலைப் புலிகளை வேறொரு அணுகு முறையில் அனைத்துலக சமூகம் எதிர்கொள்ளும் நிலைக்குள் தள்ளப்பட்டமை என இரண்டு மூல காரணிகளாலேயே அனைத்துலக சமூகம் செயல் முனைப்பு அற்ற நிலையில் இருந்ததென அவர் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலங்களுடன் போர் முடிவுக்கு வந்த 2 ஆவது ஆண்டு நிறைவினையும் நிபுணர் குழு அறிக்கையினையும் முன்னிறுத்தி தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் மீதான கவனக் குவிப்பினைப் பெறுவதற்கும் நோர்வே உட்பட்ட அனைத்துலக சமூகத்தின் கடப்பாடுகளை வலியுறுத்தவும் கடந்த 10 ஆம் திகதி நோர்வே தமிழ் கற்கை மையம் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் இக் கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது.
இக் கருத்தரங்கு ஒஸ்லோ பல்கலைக் கழகத்தின் சமூக மானிடவியல் துறைப் பேராசிரியர் தலைமையில் இடம்பெற்றது.
ஜான் இஜ்லண்ட் தனது கருத்துரையில் மேலும் தெரிவிக்கையில், உண்மைகள் கண்டறியப்பட்டு நீதி நிலை நாட்டப்படுவது வன்முறை சார்ந்த அவலங்களுக்கு முகம் கொடுத்த தேச மக்களுக்கு மிகவும் அவசியமானதாகும். தவறுகள் வெளிப்படுத்தப்பட்டு பொறுப்புக் கூறப்பட்டு திருத்தப்படாவிடின் நடந்தேறிய அவலங்களும் தவறுகளும் மீண்டும் நடந்தேறும் அபாயம் உள்ளது. எனவே உண்மைகள் கண்டறியப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும்.
இரு தரப்பு மீதான போர்க் குற்றச் சாட்டுகளும் விசாரிக்கப்பட்டு உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். வென்ற தரப்பான கொழும்பு அதிகார மையத்தின் மீதே பொறுப்புக் கூறும் வகையிலான கவனம் குவிக்கப்பட வேண்டும்.
தேசிய அரசுகள் தமது சொந்த மக்களை இன அழிப்பு, போர்க்குற்ற மீறல்கள், இனத்துடைப்பு மற்றும் மனிதத்திற்கு எதிரான மீறல்களிலிருந்து பாதுகாக்கத் தவறும் பட்சத்தில் நாங்கள் ஒருமித்தும் விரைவாகவும் வலுவானதுமான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என 2005 இல் இடம்பெற்ற ஐ.நா. உயர் மட்டக் கூட்டத்தில் 190 நாடுகள் உறுதியெடுத்திருந்தன.
இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலான விரைந்த செயற்பாடு லிபியா விவகாரத்தில் நடைமுறைப்பட்டது. ஏலவே எச்சரிக்கப்பட்டிருந்த போதும் 2009 இல் இலங்கைத் தீவில் ஐ.நா உட்பட்ட அனைத்துலக சமூகம் நடந்தேறிய அவலமான பேரழிவினைத் தடுக்கத் தவறிவிட்டன.
இறுதிக் கட்டப் போரின் போது நலன்சார் அரசியல் காரணிக்கு அப்பால் அனைத்துலக சமூகம் இரண்டு மூலக் காரணிகளால் செயல் முனைப்பு இல்லாதிருந்தது. முதலாவது காரணி, ஆசியாவின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவுகளையும் உதவிகளையும் வழங்கின.
இரண்டாவது காரணி, பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்துலக பேõரின் விளைவு, விடுதலைப் புலிகளை வேறொரு அணுகு முறையில் அனைத்துலக சமூகம் எதிர்கொள்ளும் நிலைக்குள் தள்ளப்பட்டமையாகும்.
நோர்வேக்கு முக்கிய பொறுப்புகள் உள்ளன. அதேவேளை, அதன் வகிபாகம் எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமையும். இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் மூலம் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது மிக அவசியமானது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply