முல்லைக் கடலில் சிங்கள மீனவர்கள் ஆதிக்கம்: தமிழ் மீனவர் உரிமை பறிக்கப்படுவதாகக் கூட்டமைப்புக் குற்றச்சாட்டு
முல்லைத்தீவு மீனவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு பெரும்பான்மை இன மீனவர்களுக்கு வழங்கப்படுவது குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப்படும். அரசு உரிய நடவடிக்கை எடுக்காது அசண்டையீனமாக நடந்தால், வழக்குத் தொடரப்படும். இவ்வாறு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முல்லைத்தீவு மக்களிடம் உறுதிபடத் தெரிவித்தனர்.
கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், எஸ்.சிறிதரன் ஆகியோர் நேற்றுமுன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தனர். இச்சந்திப்பின்போது பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன என்று எஸ்.சிறிதரன் எம்.பி.உதயனுக்குத் தெரிவித்தார்.
அவர் கூறியவை வருமாறு:
கரைவலைப்பாடு மீன்பிடி பெரும்பாலும் தமிழ் மீனவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பான்மையின மீனவர்கள் எதுவித தடையுமின்றி கரைவலைப்பாடு மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.முல்லைத்தீவில் இன்றளவில் சுமார் 10ஆயிரம் பெரும்பான்மையின மீனவர்கள் மீன்பிடிப்பதில் ஈடுபட்டுள்ளனர். கொக்கிளாய் முதல் சுண்டிக்குளம் வரையிலான கிலாகத்தை, மாதிரிக்கிராமம், உப்புமாவெளி, தூண்டாய், அலம்பில், செம்மலை, நாயாறு, கொக்குத்தொடுவாய், கருநாட்டுக் கேணி ஆகிய பிரதேசங்களில் தமிழ் மீனவர்கள் குடியேற்றப்படவும் இல்லை; மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்படவும் இல்லை.
எங்கள் நந்திக் கடலில் சிங்களவர் மீன்பிடிப்பு ஆனால் இந்தப் பிரதேசங்களில் பெரும்பான்மையின சிங்கள மீனவர்கள் நேரடியாக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்று மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். தமிழ் மீனவர்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.எமது நந்திக்கடலில் சிப்பாய்களும் சிங்களமீனவர்களும் இறால் பிடிப்பதில் ஈடுபட்டுள்ளனர். இந்த மண்ணில் பிறந்த தமிழ் மீனவர்கள் செய்வதறியாது கைகளைப் பிசைந்துகொண்டு இருக்கின்றனர். முல்லைத்தீவு மக்கள் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்து தீர்க்க கூட்டமைப்பு முயற்சி மேற்கொள்ளும் அல்லது வழக்குத் தொடரும் என்றார் சிறிதரன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply