யாரை யாரிடமிருந்து பாதுகாக்க நாடுமுழுவதும் படைமுகாம்கள்?

பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நாடு முழுவதும் படைமுகாம்கள் அமைக்க பாதுகாப்புச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்ற செய்தி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இச் செயல் நாட்டை சர்வாதிகார ஆட்சிக்கு இட்டுச்செல்ல அரசு எடுக்கும் முதல்படியும், பெரும் சதித்திட்டமும் என எண்ணத்தோன்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சர்வாதிகார ஆட்சியையும், போராளிகள் என்ற போர்வையில் இயங்கிய ஆயுதக்குழுக்களின் கீழ் மக்கள் பட்ட கஸ்டங்கள், துன்பங்கள் சொல்லில் அடங்காதது.
 
அது மட்டுமன்றி பல ஆண்டுகள் அடக்கி ஆளப்பட்டதை என்றும் மறக்கவில்லை. இலங்கை இராணுவத்தையே தம்மத்தியிலிருந்து வாபாஸ் பெறப்பட வேண்டுமென விசனம் கொண்டிருந்த மக்களுக்கு அரசின் இத்தீர்மானம் பேரிடியாக அமைந்துள்ளதாக ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
 
நாடளாவிய ரீதியில் இம்முகாம்கள் அமைக்கப்படுவதாக கூறப்பட்டாலும் இச் செயல் தமிழ் மக்களையும் சிக்க எடுக்கப்படும் திட்டமிட்ட செயலாகவே ஏனையவர்களுடன் சேர்ந்து நானும் கருதுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இம் முடிவு எதிர்பார்த்ததிற்கு முரணான ஒரு முடிவையே தரும். வடக்கு கிழக்கு மக்களை துன்புறுத்துவதாகவே அமையும். இம்முயற்சியை உடனடியாகக் கைவிடுமாறு அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குகின்றேன்.
 
இல்லாத விடயங்களை இருப்பதாக பெரிதுபடுத்தி காட்டி மக்களை பீதியடைச்செய்யாது நடந்துகொள்ளுமாறும் இந் நாட்டில் கிளர்ச்சியுமில்லை கிளர்ச்சிக்காரருமில்லை. கிளர்ச்சிக்கான எந்த நடவடிக்கையுமில்லை என்பதும் கிளர்ச்சியை அடக்கும் முறை இதுவுமல்ல என்றும் கூறுகின்றேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply