30 வருடம் பயங்கரவாதம் நிலவிய நாட்டில் ஒரே இரவில் அவசரகால சட்டத்தை நீக்க முடியாது
அவசரகால சட்டத்தை படிப்படியாக நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. அதாவது ஏற்கனவே அவசரகால விதிகள் பலவற்றை அரசாங்கம் தளர்த்தியுள்ளது. அதுபோன்று எதிர்காலத்திலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 30 வருடகாலம் பயங்கரவாதம் நிலவிய நாடு ஒன்றில் ஒரே இரவில் அவசரகால சட்டத்தை நீக்கிவிட முடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அவசரகால சட்டம் நீக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அமைச்சர் இவ்விடயம் குறித்து மேலும் கூறுகையில்: அவசரகால சட்டத்தை படிப்படியாகவே குறைக்க நடவடிக்கை எடுக்க முடியும். மாறாக ஒரே தடவையில் அதனை நீக்க முடியாது. கடந்த 30 வருடங்களாக இந்த நாட்டில் பயங்கரவாதம் நிலவியுள்ளது. எனவே அவ்வாறான ஒரு நாட்டில் ஒரே இரவில் அவசரகால சட்டவிதிகளை நீக்குவது என்பது சாத்தியமற்ற விடயமாகும்.
எனினும் படிப்படியாக அந்த விதிகளை குறைக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவதுடன் அது குறித்து குறித்து ஆராய்கின்றோம்.
ஏற்கனவே அதிகமான அவசரகால விதிகளை அரசாங்கம் தளர்த்தியுள்ளது. அதுபோன்று எதிர்காலத்திலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது விடயத்தில் எதிர்காலத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படும்.
அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபின்னர் அங்கு தேசப்பற்று விடயம் தொடர்பான சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்பட்டது. தற்போது அல் கைதா அமைப்பின் தலைவர் பின்லேடன் கொல்லப்பட்டுவிட்டார் என்பதற்காக அந்த சட்டமூலம் அமெரிக்காவில் வாபஸ் பெறப்படும் என்று நாங்கள் கருதவில்லை.
ஆனால் எமது அரசாங்கம் அவ்வாறான நிலைப்பாட்டில் இல்லை. அதாவது எதிர்காலத்தில் அவசரகால சட்டவிதிகள் படிப்படியாக குறைக்கப்படும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம்.
தற்போது வடக்கில் அதியுயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டுவருகின்றன. அங்கு மீண்டும் மக்கள் தமது இடங்களில் மீள்குடியேறிவருகின்றனர். இந்நிலையில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் படிப்படியாக அகற்றப்பட்டுவருவதானது ஒரு மிகப்பெரிய விடயமாகும்.
காரணம் அதியுயர் பாதுகாப்பு வலய விவகாரம் என்பது சர்வதேச மட்டத்தில் ஆராயப்பட்ட விடயமாகும். அத்துடன் இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களில் இருந்த மக்களில் அதிகமானோர் தற்பொது மீள்குடியேற்றப்பட்டுவிட்டனர். குறைந்தளவிலானோரே தற்போது முகாம்களில் தங்கியுள்ளனர்.
ஆரம்பத்தில் வவுனியாவில் அகதி மக்கள் தங்க வைக்கப்பட்டபோது எவ்வாறான விமர்சனங்கள் வெளிவந்தன என்று அனைவருக்கும் தெரியும். அந்த மக்கள் மீள்குடியேற்றப்படமாட்டார்கள் என்று பலர் கூறினர். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. குறைந்தளவிலானோரே முகாம்களில் எஞ்சியுள்ளனர்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதாக கூறப்பட்டுவந்தது. எதிர்க்கட்சியினர் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவந்து விசேட குழுவினரை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பவேண்டும் என்று கோரிக்கை விடுத்தமை ஞாபகமிருக்கும்.
ஆனால் இன்று அவ்வாறõன நிலைமை யாழ்ப்பாணத்தில் இல்லை. அரசாங்கம் அதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்தியுள்ளது. எனவே 30 வருடகாலமாக பயங்கரவாதம் நிலவிய நாட்டில் அவசரகால சட்டவிதிகளை ஒரே இரவில் நீக்கி விட முடியாது என்றார்.
இதேவேளை அவசரகால சட்டத்தை நீக்குவதுடன் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் விசாரணை செய்யவேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply