உள்நாட்டு யுத்தம் தொடர்பான சர்வதேச சட்டங்களில் திருத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் : ஜீ.எல்.பீரிஸ்

உள்நாட்டு யுத்தம் தொடர்பான சர்வதேச சட்டங்களில் திருத்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பயங்கரவாத இல்லாதொழிப்பு குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாடுகளுக்கு இடையிலான யுத்தம் தொடர்பான சர்வதேச சட்டங்களே தற்போது அமுலில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், உள்நாட்டில் அரசாங்கமொன்றுக்கும், மற்றுமொரு தரப்பினருக்கும் இடையிலான யுத்தம் தொடர்பில் எவ்வாறான நியதிகள் பின்பற்றப்பட வேண்டும் குறித்த தெளிவான சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததுடன் இராணுவத்தினரின் கடமை முடிந்துவிடவில்லை எனவும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் உலகின் மிகப் பாரிய மனிதாபிமான மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்தாக அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்தியதாகவும் இது ஜெனீவா பிரகடனத்திற்கு முரணானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பில் ஏன் எவரும் குரல் கொடுப்பதில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.வரையறுக்கப்பட்ட வளங்களையும், சிறிய இராணுவ, கடல் மற்றும் விமானப்படையைப் பயன்படுத்தி உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாத அமைப்பை அரசாங்கம் தோற்கடித்துள்ளதாக அவர் தெரவித்தள்ளார்.

21ம் நூற்றாண்டில் பயங்கரவாத அமைப்பொன்றை முற்று முழுதாக தோற்கடித்த ஓரே நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சிங்கள பிரச்சினையாக இதனை நோக்க முடியாது எனவும், பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு எதிரான யுத்தமாக இதனை நோக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply