ஐநா அறிக்கை கொண்டு விசாரணை நடத்துவதையே சர்வதேசம் விரும்புகிறது
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர்குழு வெளியிட்ட அறிக்கைக்கான இலங்கை அரசின் உத்தியோகபூர்வ பதிலை ஐநா தொடர்ந்தும் எதிர்பார்த்துள்ளது. நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியமாதென ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
அதனையே சர்வதேச சமூகமும் எதிர்பார்த்திருப்பதாக இன்னர் சிட்டி பிரஸ் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த பான் கீ மூன் கூறியுள்ளார்.
இது தொடர்பில் இன்னர் சிட்டி பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
இலங்கைப் போரின்போது குறிப்பாக போரின் இறுதிக்கால கட்டத்தில் ஐ.நா.வின் மனிதாபிமான மற்றும் பாதுகாப்பக்கான சாசனங்கள் எந்தளவுக்குப் பாதுகாக்கப்பட்டன என்பதையிட்டு நிபுணர்குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்போவதாக ஏப்ரல் 25 ஆம் திகதி அறிவித்த பான் கீ மூன், அதனையடுத்து கடந்த 40 நாட்களாக அது தொடர்பாக எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை.
இந்தப் போர்க் குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என நவநீதபிள்ளை தெரிவித்திருக்கும் கருத்தை பான் கீ மூன் ஆதரிக்கிறாரா என்பது பற்றியும், ஐ.நா.வின் நடவடிக்கைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற அவரது பரிந்துரைகள் தொடர்பாகவும், ஐ.நா. அதிகாரியான விஜய் நம்பியார் தொடர்பிலும், குறிப்பாக சரணடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பாகவும் பான் கீ மூனிடம் இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பியது.
இதற்குப் பதிலளித்த பான் கீ மூன், அங்கத்துவ நாடுகளே இது தொடர்பான தீர்மானத்தை எடுக்க முடியும் எனத் தெரிவித்தார். கேள்வியின் இரண்டாவது பகுதிக்கு அவர் பதிலளிக்கவில்லை. இலங்கை அரசின் பதிலை தான் எதிர்பார்த்திருப்பதாகவும், தினசரி, வாராந்தம் இலங்கை அரசிடமிருந்து பதில் வந்திருக்கின்றதா என்பதை தான் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
நிபுணர்குழுவின் அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தினால் செய்யப்பட வேண்டிய பணிகள் தொடர்பாகவே அதிகளவுக்குக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பொறுப்புக்கூறும் கடமைப்பாடு அவசியமானதாகும். நிபுணர் குழுவின் அறிக்கையை முழுமையாக அமுல் செய்வது தொடர்பாக இலங்கை அரசுடன் தான் தொடர்ச்சியாகப் பேச்சுக்களை நடத்தவுள்ளேன். இதனைத்தான் சர்வதேச சமூகமும் விரும்பகின்றது எனவும் ஐ.நா. செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply