தமிழர்களின் பிரச்சினைகளுக்கு வேறு நாடுகளில் தீர்மானங்கள் நிறைவேறலாம்: த.தே.கூ

இலங்கை அரசாங்கம் தவறுகளை உணர்ந்து செயற்படாவிடின் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப்போல் வேறு நாடுகளிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் நிலை ஏற்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் விடையும் யதார்த்தமான சிந்தனையையே வெளிக்காட்டியுள்ளது. எனவே இந்தத் தீர்மானத்தினை தவறு என்றுகூறமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை மீது பொருளாதாரத் தடையினை விதிக்க வேண்டும், இலரங்கை அரசு போர்க்குற்றவாளியாக ஐ.நா. பிரகடனப்படுத்துமாறு இந்தியா கோர வேண்டும் என்ற தீர்மானங்கள் நேற்று முன்தினம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து கருத்து கேட்டபோதே சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழக சட்டசபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்வைத்த முதலமைச்சர் ஜெயலலிதா அதுகுறித்து தெளிவுபடுத்தியிருந்தார். இலங்கை தமிழர்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாக நடத்தப்படுவதாகவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு இன்னமும் தீர்வைக் காணவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். காணாமல்போன மக்கள் தொடர்பிலோ அல்லது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பிலோ விசாரணைகள் நடத்தப்படவில்லை. எனவே இத்தகைய செயற்பாடுகளை இலங்கை அரசு மேற்கொள்வதற்கு அழுத்தம் கொடுக்கப்படவேண்டுமானால் இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடையினை விதிப்பதே ஒரே வழியாகும் என்று தமிழக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

தமிழக முதலமைச்சரின் இத்தகைய கருத்து யதார்த்தமான சிந்தனையினை வெளிக்காட்டியுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தமிழர்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை கண்டிருந்தால் இத்தகைய நிலை உருவாகியிருக்க மாட்டாது. எனவே தமிழக சட்டசபையின் தீர்மானத்தை தவறென கொள்ளமுடியாது.

இலங்கை அரசாங்கம் இனியாவது தவறுகளை திருத்தி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண முயலாவிடின் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் போல் வேறு நாடுகளிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் நிலை ஏற்படும். எனவே அரசாங்கம் இனியாவது தவறுகளை திருத்திக்கொண்டு பிரச்சினைகக்கு தீர்வைக் காண முன்வரவேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply